26 ஆகஸ்ட், 2010

ஈழத்தமிழர் நிலை: தாமே நேரில் செல்லவுள்ளதாக கிருஷ்ணா தெரிவிப்பு

இலங்கையில் தமிழ் மக்களின் நிலை குறித்து ஆராய தாமே அங்கு செல்லவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களின் மறுவாழ்வு குறித்து, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார்.

"இதுவரை இலங்கை தமிழர்களுக்கு இந்தியா சார்பில் வழங்கப்பட்ட நிதி மற்றும் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேர்ந்ததா? இல்லையா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

போர் முடிந்து ஓராண்டாகியும் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, முகாம்களில் உள்ள தமிழர்கள் துன்புறுத்தப்பட்டே வருகிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில், கடந்த 1987ஆம் ஆண்டில், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா இடையே ஏற்பட்ட அரசியல் தீர்வுக்கான ஒப்பந்தம், இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இலங்கையில், தமிழர்களுக்கு அரசியல்ரீதியாக சம உரிமை அளிக்கப்படாமல், இரண்டாம் கட்ட மக்களாக நடத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசு இந்தியாவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி வருகிறது. 52 ஆயிரம் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அவதிப்பட்டு வாழ்கிறார்கள். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்று பாலு கூறினார்.

நேற்றைய அமர்வின் போது, அ.தி.மு.க. உறுப்பினர் தம்பித்துரை, ம.தி.மு.க. உறுப்பினர் கணேசமூர்த்தி, பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட்), பி.லிங்கம் (இந்திய கம்ஸினிஸ்ட்) ஆகியோரும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசுகையில்,

"இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு பணிகள் குறித்து ஐ.நா. அமைப்பின் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இலங்கைக்கு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைப்பதற்கு இது சரியான நேரமல்ல என்றே கருதுகிறேன்.

ஏற்கனவே இலங்கை சென்ற தமிழக எம்.பிக்கள் குழுவில் மற்ற கட்சியினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறுவது தவறு. அளிக்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இலங்கைக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிடலாம்.

இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத இறுதியில் நானே நேரில் சென்று தமிழர்கள் மறுவாழ்வு பணிகளை நேரில் பார்வையிட இருக்கிறேன். அதற்கு முன்பாக வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

இலங்கை அதிபர் சமீபத்தில் டில்லி வந்தபோது, தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு அவர்கள் அமைதியாக வாழ வழி செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் வற்புறுத்தி இருந்தார்.

இலங்கை அரசியல் சாசனத்தின் 13ஆவது பிரிவுக்குட்பட்டு, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்போது பிரதமர் கேட்டுக்கொண்டார்.

அகதிகள் முகாம்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே தற்போது உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்து உள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும், இலங்கையின் வடக்குப்பகுதியில் ரயில்வே கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா வழங்கிய ரூ.80 கோடி கடன் ரத்து செய்யப்படும் என்றும் இந்தியா சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்வே திட்ட பணிகள் விரைவில் முடிவடையும் என்று நம்புகிறோம்.'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக