இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தைப் பொறுத்தவரையில், நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சகல அரசியல் கட்சிகளுமே பொறுப்பாளிக ளென்றும் இந்தக் கட்சிகள் இதற்கான தார்மீக பொறுப்பை ஏற்று வெளிப்படையாகக் கூட்டு மன்னிப்பைக் கோரும் பட்சத்தில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் ஏற்பட பிரதான உந்துதலைக் கொடுக்குமென்றும் சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளரும் இராஜதந்திரியுமான ஜயந்த தனபால தெரிவித்தார்.
அதேநேரம் இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டமொன்றை இயற்ற வேண்டுமென்றும் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (25) சாட்சியமளிக்கையில் அவர் பரிந்துரைத்தார்.
இந்த நாட்டின் பிரச்சினைக்குப் பிரபாகரன் மட்டும் காரணம் அல்ல. இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள்தான் பொறுப்புக் கூற வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்கு அரசியலமைப்பில் துரிதமாக மாற்றங்களைச் செய்து அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். இந்த ஆணைக்குழு விசாரணை முடியும்வரை இதற்கு காத்திருக்கக்கூடாது.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தமிழில் உரையாற்றுவதைப் போல் எதிர்க்கட்சியினரும் பின்பற்றினால் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான ஓர் ஆரம்பமாக அமையுமென்றும் ஜயந்த தனபால குறிப்பிட்டார்.
ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் நடைபெற்ற விசாரணையில் சாட்சியமளித்த அவர்,
மனித உரிமைகளைப் பேணி இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இன மற்றும் மத நல்லுறவுச் சட்டமொன்றை உருவாக்க வேண்டும். இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஜனாதிபதியின் செயல் திட்டம் வெற்றியளித்திருக்கிறது. அதுபோல் ஆயுதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில், அரச படைகளைத் தவிர எவரும் ஆயுதம் வைத்திருக்க முடியாது என்ற சட்டம் இருந்தது.
அதுபோல், பொலிஸ், இராணுவம் உள்ளிட்ட அரச பாதுகாப்புப் பிரிவினரைத் தவிர வேறு அமைப்புகள், தனி நபர்கள் ஆயுதம் வைத்திருப்பது மக்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்காது. அதேவேளை, பொலிஸ் சேவைக்குத் தமிழர்களைச் சேர் த்துக் கொள்வதைப் போன்று முப்படையிலும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அரசியலமைப்பில் மக்களின் அபிலாஷைகள் பிரதிபலிக்கப்பட வேண்டும். ஒரு சிறு குழு சேர்ந்து அரசியலமைப்பை உருவாக்குவதைவிட கிராமிய மட்டத்தில் மக்களின் கருத்துகளும் அறியப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயக விழுமியத்தைச் சரியாகப் பேண முடியும்.
சர்வதேச சமூகத்துடன் செயலாற்றுவது சவால் மிக்க விடயமாகும். முரண்பட்டுக்கொண்டு நாம் செயற்பட முடியாது. இலங்கையின் நிலவரத்தை அறிவதற்கு அவர்களுக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும். இராஜதந்திர மட்டச் செயற்பாட்டை இன்னும் விளைதிறன் மிக்கதாக மேம்படுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களைக் கவர்வதற்கும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முதலில் இலங்கையர்கள் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் வாழ்கிறார்கள் என்பதைப் பற்றிய தரவுகளைத் திரட்ட வேண்டும். அதற்கு நமது வெளிநாட்டுத் தூதுவர்களை, இலங்கையர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தொடர்பில் அந்நாடு சிறந்த பணியை ஆற்றுகிறது.
அதேபோல நாமும் நமது பணிகளை விரிவாக்க வேண்டும்.
உயிரிழந்த புலி உறுப்பினர்களின் மயானங்களுக்கு அவர்களின் உறவினர்கள் சென்று அவர்களுக்கு கெளரவம் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்’ என்றும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக