11 ஜூலை, 2010

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை: ஐரோ. ஒன்றிய தூதுவர்களுடன் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பேச்சு அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கம்




ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பீ. பிளஸ் சலுகை தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளின் தூதுவர்களையும் பிரதிநிதிகளையும் நேற்று முன்தினம் (09) அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வெளிவிவகார பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தனவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

கடந்த ஜூன் 17ஆந் திகதிய ஐரோப்பிய ஆணைக் குழுவின் கடிதம் தொடர்பில் கடந்த 24ஆம் திகதி அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டமை குறித்தும் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளையும் கால அவகாசத்தையும் அரசாங்கம் நிராகரிக்க மேற்கொண்ட தீர்மானத்தின் பின்னணி பற்றி பேராசிரியர் பீரிஸ், இந்தச் சந்திப்பின்போது தெளிவுபடுத்தியுள்ளார். பொதுமக்களின் நலன் கருதியும் தேசிய பாதுகாப்பை முன்னிட்டும் சில மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைத் தற்போதைக்கு நீக்க முடியாதென்றும், பின்னர் பரிசீலிக்க முடியுமென்றும் பேராசிரியர் பீரிஸ் விளக்கியுள்ளாரென்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இலங்கைக்கு ஜீ. எஸ். பீ. பிளஸ் சலுகையை வழங்குவது தொடர்பாகத் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்த முடியுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் விடுத்திருந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர், இலங்கை மக்களுக்கு ஜீ. எஸ். பீ. சலுகையைப் பெறுவதைப் பற்றிய வழிகளை ஆராய்வதுடன், ஜூன் 17 ஆம் திகதிய கடிதத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அரசாங்கம் இல்லையெனத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஆணைக் குழுவின் ஜூன் 17, 2010 திகதிய கடிதம் தொடர்பில் விளக்கமளித்தமைக்காக நன்றி தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் இலங்கை அரசாங்கத்தின் கருத்துகளை ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கையின் கெளரவத்தையும் இறைமையையும் சமரசம் செய்யாத ஆக்கபூர்வமான ஆலோசனைகளைப் பரிசீலிக்கத் தயாரென்று அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித் துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக