11 ஜூலை, 2010

ஈரான்: பெண்ணை கல்லெறிந்து கொல்லும் தண்டனை மறுபரிசீலனை





கல்லால் அடித்துக் கொல்லுமாறு ஈரான் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என அந்நாட்டு மனித உரிமை கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.

ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் சகினா முகமதி அஷ்தியானி (43). இரு ஆண்களுடன் தகாத உறவு கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சகினாவை, கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தகவல் வெளியானதும், பல்வேறு தரப்பினரும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காட்டுமிராண்டித் தனமான, மனிதநேயமற்ற செயல் இது என பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், சகினாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. கல்லால் அடித்து அவர் கொல்லப்படமாட்டார் என லண்டனில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்ததாக, லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதே கருத்தை ஈரான் மனித உரிமை கவுன்சில் அதிகாரி முகமது ஜவத் லரிஜனியும் தெரிவித்துள்ளார்.

கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனைக்கு மாற்றான தண்டனை வழங்க, ஈரானிய சட்டத்தில் இடம் உள்ளது. இருப்பினும் நீதிபதிகள் அதை பயன்படுத்துவது கிடையாது என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சகினாவின் வழக்கறிஞர் அதிகாரபூர்வமாக தண்டனை மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் வரையில் சகினாவின் நிலை கேள்விக்குறிதான் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக