2 ஜூலை, 2010

ஐநா நிபுணர் குழுவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இறுதிக்கட்டப் போரின் போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் பொருட்டு ஐநா செயலாளர்நாயகம் நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளதை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்றுத் தெரிவித்துள்ளது.

இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கும் அது தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கவும் கடந்த 22ஆம் திகதி ஐநா நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதி கெத்தரின் அஷ்டன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பான் கி மூன், இலங்கை அரசாங்கத்துக்கு விடுத்திருந்த கூட்டறிக்கையில் மனித உரிமைகள் விவகாரம் முக்கிய விடயமாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா எதிர்ப்பு

அதேவேளை, இந்த நிபுணர் குழுவுக்கு நேற்றையதினம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது சீன அரசாங்கம்.

இலங்கை அரசு இவ்விடயத்தைக் கையாளும் என்று தாம் நம்புவதாகக் கூறியுள்ள சீனா, பான் கி மூனும், உலக நாடுகளும் இலங்கையின் உள்நாட்டு நிலைமையை உறுதிப்படுத்த அந்நாட்டுக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுள்ளது.

ஏற்கனவே ஐ.நா குழுவுக்கு அமெரிக்கா தனது ஆதரவையும், ரஷ்யா தனது எதிர்ப்பையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்திய அரசாங்கம் இதுகுறித்து இன்னமும் ஒரு அறிக்கையும் விடுக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக