2 ஜூலை, 2010

இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும்-பிரதமர்


உள்ளூர் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து நாடு தன்னிறைவை அடைய வேண்டும். இதற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் தி.மு. ஜயரட்ன தெரிவித்தார்.

பாண் சாப்பிடக் கூறும் எதிர்க் கட்சி உறுப்பினர்களின் வாயை கோதுமை மா பசையால் ஒட்டி சோளக் காட்டு பொம்மைகளை தயாரிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு கிழக்கில் 30 வருடங்களுக்குப் பின்னர் உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. உற்பத்தி அதிகரிக்கும் போது பொருட்களின் விலைகள் குறையும். கிழக்கில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது என ரவூப் ஹக்கீம் ஏற்றுக் கொண்டுள்ளார். இலக்கத்தை வைத்துக் கொண்டு விவாதிப்பதில் எவ்விதமான நன்மையும் இல்லை. தேசிய உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிவாரணங்கள், சலுகைகள் தொடர்பில் எவருமே கூறுவதில்லை. உணவில் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே அபிவிருத்தியடைய முடியும். மக்களுக்கு பலத்தையும் மன நிம்மதியையும் ஊக்கத்தையும் அளிக்க வேண்டும்.

பாண் தொடர்பில் கதைக்கின்றனர். ஏன் அரிசி, சோளம் உற்பத்தி குறித்து கதைப்பதில்லை. நாட்டிற்குள் சகல பொருட்களையும் உற்பத்தி செய்து மூன்று மாதங்களில் தன்னிறைவு அடையும் யோசனைகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மக்களை தைரியமூட்ட வேண்டும். நாம் மட்டுமல்ல, எதிர்க் கட்சியினரும் உற்சாகமூட்ட வேண்டும். தேசிய உற்பத்தியை அதிகரித்தால் வெளிநாட்டு பொருட்களில் தங்கியிருக்கவோ கையேந்தவோ தேவையில்லை.

அரசியல் தரிசனம் அல்ல, அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் நாம் நம்புகிறோம். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

60 வருடங்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றோம். இனிமேலும் அந்த நிலையிலேயே இருக்கக் கூடாது. குறிப்பாக எதிர்க் கட்சியினர் பாண் குறித்தே பேசுகின்றனர். கோதுமை மாவில் பசை செய்து அவர்களின் வாய்களை ஒட்டி சோளக் காட்டு பொம்மைகளை தயாரிக்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து இலாபத்திற்கு உண்டு குழிகளை நிரப்பி பிச்சைக்காரர்கள் ஆகுவோம் என்றே எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். 2011 மிகவும் பலமான வரவு செலவுத் திட்டத்தை மஹிந்த சிந்தனையின் மூலமாக முன்வைக்க முடியும். அதற்காக நாம் கைகோர்க்க வேண்டும். கல்வி ரீதியில் மக்களை தயார்படுத்தாமல் பொருளாதாரத்தை மேம்படச் செய்ய முடியாது. சம்பாதிக்க வேண்டும், எமக்காக செலவழிக்க வேண்டும். பாதுகாப்பிற்காக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மதங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. துன்பத்திலிருந்து மீண்டு இன்பமான வாழ்க்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் காலடி எடுத்து வைத்துள்ளோம். அதற்காகவும் அதனை உறுதிப்படுத்தவும் நாம் செயற்பட வேண்டும். உழைக்காமல் அதனைச் செய்ய முடியாது. தாய் நாடு ஒருவருக்கு உரித்துடையது அல்ல. எமது நாடு என்ற உணர்வை வெளிநாடுகளுக்கு வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் தாய் நாட்டை பாதுகாத்து ஒரு முன்மாதிரியாக உலகத்தின் முன் திகழ முடியும்.

இது சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகரின் நாடு என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். இன பேதமின்றி சகலரும் ஒருவரே என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி சர்வதேசத்துடன் முகம் கொடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக