இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை குழு அமைப்பதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கூறப்பட்ட பிரச்னைகளை அரசு உரிய வகையில் அணுகி தீர்வு கண்டுவரும் நிலையில் இத்தகைய குழு தேவையற்றது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் தெரிவித்தார்.
÷2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கை அரசு மீது கடுமையான புகார் எழுந்தது. இது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தற்போது முகாமில் அடைக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் மீதும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இது குறித்து தனக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்கான குழுவை அமைக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் முடிவு செய்துள்ளார். இக்குழு உறுப்பினர்களின் பெயர்களை விரைவில் அறிவிக்க உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் துணைச் செயலர் லின் போஸ்கோவுடன் பேசுகையில், ஐ.நா. ஆலோசனைக் குழு அமைப்பது தேவையற்றது என்று தெரிவித்ததாக பெரிஸ் கூறினார்.
கடந்த வாரம் இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த லின் போஸ்கோ, அதிபர் ராஜபட்ச, பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாசில் ராஜபட்ச, பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபட்ச, அட்டர்னி ஜெனரல் மோகன் பெரிஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக