22 ஜூன், 2010

நிபந்தனை அடிப்படையில் ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகைத் திட்டம் நீடிப்பு

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் நிபந்தனைகளின் அடிப்படையில் நீடிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே சலுகைத் திட்டத்தை நீடிப்பது தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை விவகாரம் தொடர்பில் சில முக்கிய நிபந்தனைகளுக்கு இணங்குவதாக அரசாங்கம் எழுத்து மூலம் உறுதியளிக்க வேண்டுமென இலங்கை மற்றும் மாலை தீவுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அறிவித்துள்ளது.

ஆறு மாத காலத்திற்குள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதாக உறுதியளிக்க வேண்டும் எனவும், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த நிபந்தனைக் காலம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடைநிறுத்தப்படும் சலுகைத் திட்டம் நிபந்தனையின்றி மீளவும் நீடிக்கப்படாதெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக