13 ஜூன், 2010

ஆஸி.,யில் இன்று தரையிறங்குகிறது ஜப்பான் விண்கலம்: "இட்டோகவா' கிரகத்தின் மண் மாதிரியுடன் வருகிறது

பூமியில் இருந்து பல லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, "இட்டோகவா' என்று பெயரிடப்பட்டுள்ள சிறிய கிரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரியுடன் ஜப்பான் நாட்டு, "ஹயபுசா' விண்கலம், ஆஸ்திரேலியாவின், அடிலெய்டு நகர் அருகே இன்று இரவு தரையிறங்குகிறது. இந்த விண்கலம் கொண்டு வரும் மண் மாதிரியை சோதனை செய்வதன் மூலம், சூரிய குடும்பம் எவ்வாறு தோன்றியது என்ற ரகசியம் தெரியும் என்பதால், உலகெங்கும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆவலுடன் விண்கலத்தின் வருகையை எதிர்பார்த்துள்ளனர்.

ஜப்பான் விண்வெளி விஞ்ஞானிகள், சிறிய கிரகங்கள் குறித்தும், அங்கு நிலவும் வானிலை, கனிம வளம் குறித்தும் அறிந்து கொள்ள முடிவு செய்து, அதற்காக ஒரு விண்கலத்தை தயாரிக்க முடிவு செய்தனர். இதையடுத்து, "ஜப்பான் ஏரோ ஸ்பேஸ் எக்ஸ்புளோரேசன் ஏஜன்சி' (ஜக்சா) 2003ம் ஆண்டு, "ஹயபுசா' என்ற விண்கலத்தை பூமியில் இருந்து பல லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, "இட்டோகவா' என்ற சிறிய கிரகத்தில் இருந்து மண் மாதிரியை எடுத்து வர விண்ணில் ஏவியது. மொத்தம் 621 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், 2005ம் ஆண்டு இட்டோகவா கிரகத்தை அடைந்தது. அங்கு பல மாதங்கள் இருந்து, அந்த கிரகத்தின் தரையை குடைந்து மண் மாதிரியை எடுத்தது. தனது நீண்ட பயணத்தின் போது, பிரபஞ்சத்தின் பல்வேறு கிரகங்களை விண்கலம் படம் எடுத்து அனுப்பியது.

இந்நிலையில், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு அந்த விண்கலம் பூமிக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது. ஏழு ஆண்டுகளில், 400 கோடி கி.மீ., தூரம் பயணித்துள்ள இந்த விண்கலம், இன்று இரவு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகர் அருகே தரையிறங்குகிறது. இட்டோகவா கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 100 கிராம் எடை கொண்ட மண் மாதிரி, ஹயபுசா விண்கலத்தில் உள்ள எளிதில் உருகாத, 18 கிலோ எடை கொண்ட உறுதியான உலோக உறைக்குள் (கேப்ஸ்யூல்) பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. ஹயபுசா விண்கலம், பூமிக்குள் நுழையும் போது, அது வெடித்துச் சிதறும். ஆனால், விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ள மண் மாதிரியுடன் கூடிய உலோக உறை, ஆஸ்திரேலியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் வந்து விழும். இந்த உலோக உறையை சேகரிப்பதற்காக, அது விழும் இடத்திற்கு அருகே உள்ள ஊமரா என்ற நகரில் விஞ்ஞானிகள் முகாமிட்டுள்ளனர். மண் மாதிரியுடன் கூடிய உலோக உறை உடனடியாக சேகரிக்கப்பட்டு, ஆய்விற்காக ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

இது குறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: இட்டோகவா கிரகத்தில் இருந்து எடுத்து வரப்படும் மண் மாதிரி, சூரிய குடும்பம் உருவானது குறித்த பல ரகசியங்களை தெரிந்து கொள்ள உதவும். எனவே, அதை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஹயபுசா விண்கலத்தின் இந்த ஏழு ஆண்டுகால பயணத்தில், பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது. பயணத்தின் போது, விண்கலத்திற்கு எரிசக்தியை தரும் சோலார் செல்கள் பழுதடைந்துவிட்டன. எரிபொருள் கசிவு ஏற்பட்டது. பல நேரங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பூமியில் இருந்து அனுப்பும் சிக்னல்கள், விண்கலத்தை சேருவதற்கு மிகவும் தாமதமானது. மேலும், இட்டோகவா கிரகத்தில் இறங்க வேண்டிய இடத்திற்கு பதில், வேறு ஒரு இடத்தில் விண்கலத்தை தரையிறக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இருப்பினும், வெற்றிகரமாக அந்த விண்கலம் அங்கு இறங்கி, "மினர்வா' என்ற ரோபாட் உதவியுடன் மண் மாதிரியை சேகரித்துக் கொண்டு பூமிக்கு திரும்புகிறது. மண் மாதிரியுள்ள உலோக உறைக்குள் இட்டோகவா கிரகத்தில் காணப்படும் வாயுக்களும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கிரகத்தில் இருந்து மண் மாதிரி சேகரிக்கப்படுவது இதுவே முதல் முறை. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

கண்காணிக்கிறது நாசா விமானம்!: நாசாவின் எய்ம்ஸ் ஆராய்ச்சி மையம், இந்த விண்வெளி திட்டத்தில் பங்கெடுத்துள்ளது. எனவே, ஹயபுசா பூமிக்குள் நுழைவதை இம்மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் உற்று நோக்கி வருகின்றனர். இதற்காக, 39 ஆயிரம் அடி உயரத்தில், நாசா டிசி-8 என்ற ஆராய்ச்சி விமானம் மூலம் ஹயபுசா விண்கலத்தை அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

நாசா விஞ்ஞானி ஜென்னிஸ் கென்ஸ் கூறுகையில், "விண்கலம் பூமிக்கு திரும்புவது ஒரு நல்ல காட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மண் மாதிரி கொண்ட உலோக உறை குறிப்பிட்ட இடத்தில் விழுவதற்கு ஏதுவாக விண்கலத்தை சரியான பாதையில் இயக்கும் பணி நடந்து வருகிறது. பூமியில் இருந்து 200 கி.மீ., தூரத்தில் ஹயபுசா விண்கலம் வெடித்து சிதறும். இருப்பினும், மண் மாதிரியுள்ள உலோக உறை எவ்வித சேதமும் இல்லாமல், பூமியில் விழும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக