13 ஜூன், 2010

புலி ஆதரவாளர்கள் கொடூர திட்டம் : விழுப்புரம் அருகே குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்ப்பு


விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நேற்று அதிகாலையில் ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. டிரைவரின் முன்னெச்சரிக்கை அறிவிப்பால் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது. தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட துண்டு பிரசுரங்களின் மூலம், இந்தக் கொடூரத் திட்டம், புலி ஆதரவாளர்களின் கை வரிசையா என்பதன் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலத்திலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (1064) விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேற்று அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டது. டிரைவர் சேகரன் ரயிலை ஓட்டி வந்தார். விக்கிரவாண்டி ரயில் நிலையத்தை கடந்து பேரணி ரயில் நிலையத்திற்கு முன் உள்ள சித்தணி கிராமம் அருகே சென்ற போது (சென்னையில் இருந்து 145வது கிலோ மீட்டரை அடுத்து 300வது மீட்டர் தூரம் அருகே) ரயில் பாதையில், அதிகாலை 2.10 மணிக்கு ரயில் இன்ஜின் அதிர்வுடன் செல்வதை உணர்ந்தார்.அடுத்த ரயில்வே ஸ்டேஷனான பேரணி ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ருத்திரபாண்டியிடம், தண்டவாளத்தில் அதிர்வு உள்ளதாகவும் அடுத்த ரயிலுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பும்படியும் கூறி விட்டுச்சென்றார். இதையடுத்து ஸ்டேஷன் மாஸ்டர் ருத்திரபாண்டி, ரயில்வே கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்தார்.

அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் ரயில் நிலையத்தை கடந்திருந்தது. உடனே அதிகாரிகள் அடுத்ததாக உள்ள முண்டியம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் அதிகாலை 2.20 மணிக்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி இன்ஜின் டிரைவரிடம் எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகித்து பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தினர்.இதையடுத்து ராக்போர்ட் ரயில் இன்ஜின் டிரைவர் கோபிநாத் ராவ், ரயிலை மெதுவாக செலுத்தி தண்டவாளத்தை கூர்ந்து கவனித்து வந்தார். அதிகாலை 2.43 மணிக்கு எதிரே தண்டவாளத்தில் பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரிந்து ரயிலைசமயோஜிதமாக நிறுத்தினார். பள்ளம் இருந்த இடத்திற்கு அருகே 15 மீட்டர் தூரத்தில் ரயில் நின்றது. டிரைவர் கோபிநாத்ராவ், உதவி டிரைவர் ராஜ்குமார் ஆகியோர் இறங்கி வந்து தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டிருந்தது கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் 2,500 பயணிகள் உயிர் தப்பினர்.

விழுப்புரம் டி.ஐ.ஜி.,மாசானமுத்து, எஸ்.பி.,பகலவன் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர். ரயில் தண்டவாளம் மற்றும் சிலிப்பர் கட்டைகள் டெட்டனேட் டரை பயன்படுத்தி வெடி வைத்து தகர்க்கப்பட்டிருந்தன. தண்டவாளத்தைத் தகர்க்க சதிகாரர்கள், அருகிலுள்ள சித்தணியை சேர்ந்த சீனுவாசன் மகன் செந்தாமரைக் கண்ணன் என்பவரது நிலத்திலுள்ள விவசாய மின் இணைப்பு பெட்டியின் பூட்டை உடைத்து பியூஸ் கேரியரை கழற்றி மின்சார ஒயர் மூலம் டெட்டனேட்டரை வெடித்திருப்பது தெரிய வந்தது. டெட்டனேட்டர் வெடித்தவுடன் தண்டவாளம் 3.5 அடி நீளத்திற்கு நான்கு துண்டுகளாக வெடித்துச் சிதறி அருகே 500 மீட்டர் தூரத்தில் கிடந்தது. சிமென்ட் சிலிப்பர் கட்டைகள் இரண்டு பாதியளவிற்கு உடைந்து சிதறி கருங்கற்கள் நிலத்தில் கிடந்தன. ரயில்வே மின் கம்பியும் சேதமடைந்தது. சம்பவம் நடந்த இடத்தின் அருகே வெள்ளைத் தாளில் பேனாவால் எழுதப்பட்டிருந்த கடிதம் கிடந்தது. அதில் "இந்திய அரசே,ரத்த வெறி பிடித்த ஓநாய் ராஜபக்ஷே இந்திய வருகையை கண்டித்தும், தமிழின அழிப்புக்கு துணை போன இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டிக்கிறோம். தமிழா, இனியும் மவுனம் காத்தால் புரியாது நமது மவுன வலி. இவண் மேதகு பிரபாகரன் தம்பிகள்' என எழுதப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக