13 ஜூன், 2010

முதல்வர் கருணாநிதி - மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சந்திப்பு

முதல்வர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்
சென்னை, ஜூன் 13: முதல்வர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். முதல்வரின் கோபாலபுரம் இல்லத்தில் இச்சந்திப்பு நடந்தது.

இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வருவதற்கு முன்பு இதேபோல இருவரின் சந்திப்பு நடந்தது. இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வுப் பணிகள், நிவாரணப் பணிகள் குறித்து இலங்கை குழுவிடம் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தங்கள் சந்திப்பின் போது இதை வலியுறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார்.மேலும் ராஜபட்சவை சந்திக்க தமிழகத்தில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுவையும் அவர் அனுப்பி வைத்தார்.

அக்குழுவினர் ராஜபட்சவை சந்தித்து முதல்வரின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இந்திய அரசுடன் சில ஒப்பந்தங்களில் இலங்கை குழுவினர் கையெழுத்திட்டனர். அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தர இந்தியா நிதி உதவி அளிப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் அதில் அடங்கும்.

ராஜபட்ச தலைமையில் வந்த இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கைகள் எழுந்தன. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமைக்கு (ஜூன் 14) ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில் இலங்கை குழுவின் பயணம் நிறைவுற்று அனைவரும் கொழும்பு திரும்பிவிட்டனர்.

சிவகங்கை அருகே சனிக்கிழமை கல்லூரி விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், இந்தியாவைப் போல இலங்கையிலும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாநிலம் உருவாக்கி, தமிழர்களுக்கு எல்லா அம்சங்களிலும் சம உரிமை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே இந்தியாவில் ஆட்சியில் இருந்த கட்சிகளின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது என்று கூறினார். இப்போதும் அதே பாதையில் ஒரு தீர்வை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜபட்ச கொழும்பு திரும்பிவிட்ட நிலையில், அவரின் தலைமையிலான குழுவினருடன் இந்திய குழுவினர் நடத்திய பேச்சு வார்த்தை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முதல்வர் கருணாநிதியுடன் பேசியதாகத் தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக