6 ஜூன், 2010

விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு அதிமுக நிதியுதவி


ஆண்டிப்பட்டி அருகே லாரி விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி, டி. பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர்கள் வேன் மூலம் ஊர் திரும்பும் வழியில் கரிசல்பட்டி விளக்கு என்ற இடத்தினருகே எதிரே வந்த லாரி மோதியதில், 11 பேர் மரணமடைந்ததையொட்டி இரங்கல் செய்தி வெளியிட்டதோடு, அதிமுக சார்பில் அக்குடும்பங்களுக்கு தலா 10,000/- ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்றும், இந்தக் கோர விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 17 பேர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், அவர்களது மருத்துவ சிகிச்சைக்குத் தலா 5,000/- ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்கள்.

அதன்படி, பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பாக, கட்சிப் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (6.6.2010 - ஞாயிற்றுக் கிழமை), மரணமடைந்த 11 பேர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறியதோடு, மரணமடைந்த 11 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000/- ரூபாயை வழங்கினார்.

அதே போல், மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் 17 பேர்களுக்கும் ஆறுதல் கூறியதோடு, அறிவித்தபடி காயமடைந்த 17 பேருக்கும் தலா 5,000/- ரூபாயை வழங்கினார்.

இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக