6 ஜூன், 2010

கருணை மனுக்களுக்கு கால அளவு உண்டா? புதிய தகவல்

புதுடில்லி : "குற்றவாளிகளின் கருணை மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எந்த சட்ட விதிகளும் சொல்லவில்லை. கருணை மனுக்களை விரைவுபடுத்த எந்த சட்டமும் இல்லை' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின், கருணை மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில், அப்சல் குரு, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், அறிவு ஆகியோரின் கருணை மனுக்கள் மீதான நடவடிக்கை எந்த அளவில் உள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் கோரியிருந்தார்.

இதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் விவரம்:

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் முருகன், சாந்தன், அறிவு மற்றும் பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல்குரு உள்ளிட்ட 29 மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இதில், 26 பேரின் மனுக்கள் ஜனாதிபதியின் பரிசீலனையிலும், மூன்று பேரின் மனுக்கள் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையிலும் உள்ளன.அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, தன் பதவிக்காலத்தில், இரண்டு கருணை மனுக்கள் மீது மட்டும் முடிவு தெரிவித்திருந்தார். அதற்கு முன்னர் ஜனாதிபதி பதவி வகித்த கே.ஆர்.நாராயணன் தன் பதவிக்காலத்தில், ஒரு மனு மீது கூட முடிவெடுக்கவில்லை.தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 2009 நவம்பரில், ஒரு கருணை மனு மீது முடிவெடுத்தார். அதில், கோவிந்தசாமி என்பவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளிகளான முருகன், சாந்தன், அறிவு ஆகியோரின் கருணை மனுக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பரிசீலனையில் உள்ளன. பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் கருணை மனு, 2006ம் ஆண்டு முதல், நிலுவையில் உள்ளது.

கர்நாடக போலீசார் 22 பேரை, கண்ணிவெடி மூலம் கொன்ற ஞானபிரகாஷ், சீமோன், மாடியா, பிலவேந்திரன் என்ற நான்கு பேரின் கருணை மனுக்கள், 2004ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளன.கருணை மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என, எந்தச் சட்ட விதிகளும் சொல்லவில்லை. கருணை மனுக்கள் மீதான நடவடிக்கையை விரைவுபடுத்தவும் சட்டமில்லை.இவ்வாறு அரசு பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக