3 ஜூன், 2010

தேசிய நல்லிணக்க ஆணைக்குழு பிரச்சினைக்குத் தீர்வல்ல:ஐ.தே.க

சர்வதேசத்தை ஏமாற்றவும் காலத்தைக் கடத்துவதற்காகவுமே அரசாங்கம் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவினை அமைத்துள்ளதே தவிர, பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக அல்ல. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையை தனிமைப்படுத்துவதாகவே அமையும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஏற்கனவே திருகோணமலையில் இடம்பெற்ற கொலைகளை ஆராய நியமிக்கப்பட்ட உதாலகம ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவுமில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. இந்நிலையில் இந்த ஆணைக்குழுவும் வெறும் கண்துடைப்பு வித்தையாகும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக மேலெழுந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்காகவே முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அத்தோடு வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸின் அமெரிக்காவுக்கான விஜயமும் இதற்குக் காரணமாக அமைந்தது. இதேபோன்று 2007 ஆம் ஆண்டிலும் திருகோணமலையில் இடம்பெற்ற 8 மாணவர்களின் கொலை மற்றும் பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களின் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக உதாலகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆணைக்குழுவின் விசாரணைகளை தொடர்ந்தும் நடத்துவதற்கு அரசாங்கம் நிதி வழங்கவில்லை. அத்தோடு விசாரணை அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவும் இல்லை. குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுமில்லை. வெறுமனே காலத்தைக் கடத்தி மக்களின் பணத்தை வீணாக்கி சர்வதேசத்தை ஏமாற்றியது.

இன்று தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்ட "" உண்மையை கண்டறியும் ஆணைக்குழு''வைப் போன்று தேசிய நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவில் நெல்சன் மண்டேலா கலந்து கொண்டு கறுப்பினத்தவருக்கான போராட்டத்தின் போது தன்னால் சில பிழைகளும் இடம்பெற்றதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கோரினார்.

அதேபோன்று வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக சில பிழைகள் இடம்பெற்றதாக ஆட்சியாளன் மன்னிப்பு கேட்டான். இந்த ஆணைக்குழுவில் டெஸ்மன்ட் டுட்டூ போன்ற சர்வதேச ரீதியில் புகழ்பெற்றவர்கள் அங்கம் வகித்தனர்.ஆனால், இன்று அரசாங்கம் அமைத்துள்ள ஆணைக்குழுவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நியாயமானது, ஜனநாயக ரீதியானதென சர்வதேச ரீதியில் விவாதம் நடத்தியவர்களே அங்கம் வகிக்கின்றனர்.

எனவே புதிய ஆணைக்குழுக்களை அமைத்து சர்வதேசத்தை ஏமாற்றுவதால் எமக்கு பொருளாதார உதவிகள் கிடைக்காமல் போகும். சர்வதேசத்திலிருந்து நாம் தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகும்.இன்று எமது நாட்டில் நீதி நியாயம் இல்லை. எனவே பொது மக்கள் வெளிநாட்டு தூதரகங்களையும் அரச சார்பற்ற நிறவனங்களையும் ஐ.நா.வையும் நாடிச் சென்று முறைப்பாடுகளை முன்வைக்கும் நிலை உருவாகியுள்ளது.எனவே புதிய ஆணைக்குழுக்களை நியமித்து மக்களின் பணத்தை வீணாக்காமல் அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக