3 ஜூன், 2010

இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சனல் - செய்திச்சேவைக்கு விருது

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சனல் - 4 செய்திச்சேவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் சிறந்த தொலைக்காட்சி செய்திக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்நாள் திங்கட்கிழமை லண்டனில் நடைபெற்றது.

இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பாக விரிவான - சிறந்த - செய்தியை தொகுத்தளித்த சனல் - 4 செய்திச்சேவைக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சிறந்த செய்தி தொகுப்புக்கான விருதுக்கு மேலும் பல போட்டிகள் நிலவியது. தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தித்தொகுப்புக்களில் ஸ்கை செய்திச்சேவையின் ஒரு செய்தியும், சனல் - 4 செய்திச்சேவை தொகுத்தளித்த இன்னொரு செய்தியும், இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பான செய்தித்தொகுப்பும் கடைசி கட்ட போட்டிக்குள் நுழைந்தன.

இவற்றில், இலங்கை தொடர்பாக தொகுக்கப்பட்ட செய்திக்கே விருது வழங்கப்பட்டது. இந்த செய்தித்தொகுப்பில், இலங்கை அரசின் வவுனியா தடுப்பு முகாம் செய்தி, இலங்கை இராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி மற்றும் அந்த காணொளி ஐ.நாவினால் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட செய்தி ஆகியவை அடங்கியிருந்தன.

இந்த செய்திகளை தொகுத்தளித்த செய்திக்குழுவின் சார்பில் சனல் - 4 தொலைக்காட்சியின் வெளிநாட்டு செய்திகளுக்கான பிரதி ஆசிரியர் விருதினை பெற்றுக்கொண்டார். இந்த விருதுடன் சனல் - 4 செய்திச்சேவையின் இன்னொரு நிருபருக்கு வளர்ந்துவரும் திறமையான மனித உரிமைகள் விவகார செய்தி நிருபர் விருதும் கிடைக்கப்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக