6 மே, 2010

மாந்தை மேற்குப் பிரதேச மக்களின் பிரச்சினைகள் : ஜனாதிபதிக்குக் கடிதம்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மாந்தை மேற்குப் பிரிவு கிராம, மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தில்,

"மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள், கடந்த 3 தசாப்த காலமாக யுத்தப்பிடிக்குள் அகப்பட்டு பல்வேறு துன்ப துயரங்களையும் இன்னல்களையும் அனுபவித்தவர்கள். பல தடவைகள் மாறி மாறி இருப்பிடத்தை விட்டு இடம் பெயர்ந்து வறுமைக்கோட்டில் வசித்து வருபவர்கள். அண்மைய இடப்பெயர்வினால் தம்மிடமிருந்த அனைத்தையும் இழந்த நிலையில் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் பூச்சியத்தில் இருந்து வாழ்வைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மீள் குடியேற்ற வாசிகளுக்கு நிரந்தர வீடமைத்துக் கொடுக்கும் பணி ஆரம்பித்துள்ளது.

இதற்கென வழங்கப்படும் 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபா போதியதாக இல்லை. இதனை இரட்டிப்பாக அதிகரித்தால் ஒரு நிறைவான இல்லம் அமைக்கக் கூடியதாக இருக்கும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்ட வீடமைப்புப் போன்று, இத்தொகையினை அதிகரிக்க வேண்டும் என்பதே எமது ஏகோபித்த எதிர்பார்ப்பாகும்.

சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை போன்றதே எங்களுடைய நிலைப்பாடும். எனவே எங்களுடைய மனிதாபிமானத்தின் வாழ்வியலை கருதி எமது வேண்டுகோளை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்விடயம் தொடர்பான பிரதிகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக