6 மே, 2010

இராணுவ நீதிமன்றத்திற்கு அறிவிக்காமையே பொன்சேகா சபை வரமுடியாமைக்கு காரணம்


சிறப்புரிமை பிரச்சினைக்கு சபாநாயகர் பதில்: சட்டமா அதிபருடன் பேசப்படுமெனவும் அறிவிப்பு


சரத் பொன்சேகா பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டுமென்பதை அவரது சட்டத்தரணிகள் இராணுவ நீதிமன்றத்துக்கு அறிவிக்காமையே அவர் பாராளுமன்றம் வருவதற்குத் தடையாக அமைந்து விட்டதென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனினும், இது தொடர்பில் நாம் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் சபாநாயகர் நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, ஐ. தே. க. எம்.பி. தேவரப்பெரும தாம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்திற்கு வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் நேற்று சபையில் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ; பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்படாமை சம்பந்தமாகவும் சிறையில் என்ன நடந்தது என்பது குறித்தும் தம்மை நேரில் சந்தித்துக் காரணங்களை விளக்குமாறு தேவரப்பெரும எம்.பிக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் ஜே. வி. பி. எம்.பி. அனுரகுமார திசாநாயக்க சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பி சரத் பொன்சேகா எம்.பி. பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து அவ்விடயத்தை வலியுறுத்தி எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் விமல் வீரசன்ச போன்றோரும் சபாநாயகரைக் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ; அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் சரத் பொன்சேகா எம்.பி. கலந்துகொள்ள வேண்டுமென நேற்று முன்தினம் பாராளுமன்ற செயலாளர் சிறைச்சாலை ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து அவர் அதற்கான அனுமதியை வழங்கியிருந்தார்.

அதற்கிணங்க நேற்றைய தினம் சரத் பொன்சேகா எம்.பி. பாராளுமன்ற அமர்விற்கு சமுகமளித்திருந்தார்.

எனினும், நேற்றைய தினம் சரத் பொன்சேகா எம்.பி. பாராளுமன்றத்துக்குச் செல்ல வேண்டியுள்ளமை தொடர்பாக அவரது சட்டத்தரணிகள் இராணுவ நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் பாராளுமன்றத்துக்குச் சமுகமளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்ற போது பாராளுமன்றம் செயற்பட்ட விதத்தைப் பின்பற்ற வேண்டியுள்ளது. அதற்கிணங்கவே நாம் செயற்பட்டுள்ளோம் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக