26 டிசம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் இன்று தேசிய பாதுகாப்பு தினம்

தேசிய பாதுகாப்பு தினம் இன்று பிரதமர் தி. மு. ஜயரத்ன தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுகிறது.

கடற்படை, விமானப்படை, இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதை, 24 பாடசாலை மாணவர்களின் அணி வகுப்பு, 9 கலாசாரம் குழுக்களின் அணிவகுப்பு மற்றும் 19 ஊர்திகளின் அணிவகுப்பு என்பன உள்ளடங்கிய ஊர்வலம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து, வீரசிங்கம் மண்டபம்வரை சென்று நிறைவடையும்.

பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் அணிவகுப்பில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அலங்கார ஊர்திகளுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து, நெடுந்தீவு பயணிகளுக்கான பாதுகாப்பு அங்கிகளும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான அனர்த்த நிவாரண சேவைகள் இணைப்பாளர் வைரமுத்து தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி ஞாபகார்த்த நூலொன்றும் பிரதமரால் வெளியிட்டு வைக்கப்படவிருப்பதுடன், இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள் முப்படைகளின் அதிகாரிகள், உட்படப் பலர் கலந்துகொள்ளவிருப்பதாக அனர்த்த நிவாரண சேவைகள் இணைப்பாளர் வைரமுத்து தினகரனுக்குக் கூறினார்.

அதேநேரம், இன்று காலை 9.25 மணிமுதல் 9.27 மணிவரை நாட்டிலுள்ள அனைவரும் இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மக்கள் தமது சொத்துக்கள், இருப்பிடங்களை இழந்தனர். அம்மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளையும், வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கமைய இவ்வருடம் தேசிய பாதுகாப்பு தினம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக