26 டிசம்பர், 2010

மீள்குடியேற முடியாத நிலையில் வடக்கில் இன்னமும் 18 ஆயிரத்து 4 குடும்பங்கள்




கடந்த கால யுத்தங் காரணமாக இடம்பெயர்ந்த 18 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் அகதி வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இக் குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் முகாம்களிலும் மிகுதியானோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர். யாழ். செயலகம் இறுதியாக வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி 18 ஆயிரத்து நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 67 ஆயிரத்து 95 பேர் மீளக்குடியமர முடியாது அகதி வாழ்க்கையைத் தொடர்வதாகத் தெரியவருகின்றது.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அமுலில் உள்ள வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த 15 ஆயிரத்து 406 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 9 பேர் தொடர்ந்தும் அகதிகளாகவே உள்ளனர். இவர்களுள் உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லைக்கிராமங்களான வித்தகபுரம், இளவாலை வடக்கு, வடமேற்கு பகுதிகளில் 989 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 518 பேர் கடந்த மாதம் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயங்காரணமாக வெளியேற்றப்பட்டு அகதிகளாக வாழ்பவர்களில் வெறும் 7 சதவீதம் மட்டுமே ஆகும். இதேவேளை மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள இம்மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கூட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தற்போதும் மீளக்குடியமரவில்லை.

இதேபோன்றே, வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் தவிர்ந்த வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவிலும், மூவாயிரத்து 89 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 736 பேர் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்கள் கொடிகாமம் இராமாவில் முகாமிலும் வடமராட்சியிலுள்ள உறவினர்கள், நண்பர்களுடனும் வசித்துவருகின்றனர்.

இதனிடையே குடாநாட்டினில் பரவலாக அமைந்துள்ள படைமுகாம்களிற்காக பொதுமக்களது வீடுகளே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவ்வகையிலும் 498 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 678 பேர் அகதிகளாக்கப்பட்டு இற்றைவரை வீடு திரும்ப முடியாதுள்ளனர். எனினும் அண்மைக்காலங்களில் ஆயிரத்து 497 குடும்பங்களைச் சேர்ந்த நாலாயிரத்து 733 பேர் படையினரது முகாம்களாக இருந்த வீடுகள் விடுவிக்கப்பட்டதையடுத்து மீளக்குடியமர்ந்து விட்டதாகவும் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் குடாநாடு முழுவதிலுமாக இவ்வாண்டின் இறுதிவரையிலான காலப்பகுதியினுள் இடம்பெயர்ந்திருந்த ஐயாயிரத்து 498 குடும்பங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 744 பேர் மீளக்குடியமர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையண்டிய சூனியப்பிரதேசம் மற்றும் படைமுகாம்ளாக இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகளென இம் மீள்குடியமர்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக