ஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி இரவு போதி ரணசிங்கவின் வீட்டில் நடந்த கூட்டமொன்றில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இதுபற்றி மேலும் கூறப்படுவதாவது, கட்சியின் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்சென்ற சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்கள் அன்றைய தினம் கூடி அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டுமென ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்ஜித் மத்தும பண்டார, தயாசிரி ஜயசேகர, சுஜீவ சேரசிங்க, அசோக அபேசிங்க, கயந்த கருணா திலக்க உட்பட மேலும் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், இம்முடிவை கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க, ஜயவிக்கிரம பெரேரா ஆகியோருக்கு முதலில் அறியத்தரவும், பின்னர் அவர்களுடனே இணைந்து கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவிக்கவும். இன்றைய தினம் முடிவெடுக்கப்பட்டதெனவும் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் குழுவினரின் பேச்சாளராகச் செயற்படும் போதி ரணசிங்க, இத்தீர்மானம் 24ஆம் திகதி காலை ரணிலின் பேச்சாளராகச் செயற்படும் மலிக் சமரவீரவுக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ரணில் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு தலைவராக இருக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அக்காலப்பகுதியில் சஜித் பிரதித் தலைவராகப் பணியாற்ற இடமளிக்க வேண்டுமெனவும் முன்னர் தெரிவித்திருந்த மலிக் சமரவீரவின் கருத்தை இக்குழுவினர் முற்றாகப் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஐ.தே.க.வின் இடைக்கால நிறைவேற்றுக் குழு எதிர்வரும் பத்தாம் திகதி கூடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. கட்சியின் சட்ட திட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்தல், தலைவர் உட்பட ஏனைய பதவிகளுக்கு அபேட்சகர்களைத் தெரிவு செய்தல் பற்றிய கலந்துரையாடல்கள் ஆகியன கட்சியின் குழுக்களிடையே இத்தினங்களில் நடந்து வருவதாகத் தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக