31 டிசம்பர், 2010

அபிவிருத்தி தேவைகளை இனங்கண்டு முன்னுரிமை அளிக்க வேண்டும் ஜனாதிபதி

விரைவில் அபிவிருத்தி அடைய வேண்டிய துறைகள் அல்லது அவ்வாறான இடங்களை சரியாக இனங்கண்டு அந்த செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியது கட்டாயமானது எனவும், அவற்றிற்குத் தேவையான போதிய நிதி ஏற்பாடுகளை உரிய காலத்திலே பெற்றுக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மாத்தறை புதிய நகரத்திட்டம் தொடர்பாக நேற்று (30) காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்.

மாத்தறை நகரை அண்டிய சகல துறைகளினதும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக இதன்போது நீண்டநேரம் ஆராயப்பட்டது.

இதன் பிரகாரம் மாத்தறை புதிய மருத்துவமனை கட்டடத் தொகுதியின் நிர்மாணம், வீதிகளை விஸ்தரித்தல் மற்றும் புனரமைத்தல், நகர அலங்காரம், கழிவகற்றல் முறைமை என்பன தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன. இந்தத் திட்டத்தின்கீழ் மேலும் புதிய கடற்கரை பூங்கா, சிறுவர்பூங்கா என்பன அமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்; புராதன பெறுமதிகள் பாதுகாக்கப்படும் வகையில் அபிவிருத்திச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எமது வரலாற்றுச் சிறப்புமிக்க பெறுமதிகளையும் கலாசாரத்தையும் பாதுகாக்க முடியுமென சுட்டிக்காட்டினார்.

மகா சங்கத்தினர், அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டலஸ் அலஹப்பெரும, சந்திரசிறி கஜதீர ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக