31 டிசம்பர், 2010

ஏர்போர்ட் கழிவறையில் குழந்தை பெற்ற பெண் தொட்டியில் வீசி கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு


துபாய் விமான நிலைய கழிவறையில் குழந்தை பெற்று, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தப்பிச் சென்ற பெண்ணை, அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். துபாய் விமான நிலையத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய ஊழியர் ஒருவர் உள்ளே சென்றார். அங்கு இருந்த குப்பைத் தொட்டி அருகே ரத்தம் சிதறிக்கிடந்தது. குப்பைத் தொட்டி மீது, நிறைய காகிதங்கள் போடப்பட்டு மூடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த ஊழியர் அந்த காகிதங்களை அகற்றி பார்த்தபோது, அதில், அப்போது தான் பிறந்த குழந்தை தொப்புள்கொடி சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. அக்குழந்தையின் முகம் நீலம் பாரித்து, மூச்சு விடவே திணறிக்கொண்டிருந்தது. அந்த ஊழியர் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விமான நிலைய கண்காணிப்பு கேமரா மூலம், அக்குழந்தையின் தாய் பற்றிய தகவல் கிடைத்தது. எத்தியோப்பியாவைச் சேர்ந்த அந்த பெண், விமானத்தில் புறப்பட்டு சென்றுவிட்டார். உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், திருமணம் ஆகாமலேயே தவறான உறவு மூலம், கர்ப்பமானதும், துபாய்க்கு வந்தபோது, எதிர்பாராத விதமாக கழிவறையில் அவருக்கு பிரசவம் நடந்ததும் தெரியவந்தது. பின்னர், அந்த குழந்தையை அவர் கழுத்தை திருகி, கொல்ல முயன்று பின்னர், அதனை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தப்ப முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஐக்கிய அரபு நாடுகளின் சட்டப்படி, தவறான உறவு மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது கிரிமினல் குற்றமாகும். எனவே, அந்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக