26 நவம்பர், 2010

பெருந்தோட்டத்துறையில் பல்லாயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம்



பெருந்தோட்டத்துறையில் தரிசாகக் கைவிடப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைச் சுவீகரித்து இளைஞர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பாரிய திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா - அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பும் பொருளாதாரத் தன்னிறைவும் ஏற்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார்.

“வரவு - செலவுத் திட்டத்திலுள்ள ஒரு விடயத்தை வைத்துக்கொண்டு அல்லது அரசியல் காரணத்திற்காக இந்தத் திட்டத்தினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கக்கூடாது. வடக்கு, கிழக்கு மக்களுக்குப் பல நன்மைகளைக் கொண்டுள்ள இந்த வரவு - செலவுத் திட்டத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்த வரவு - செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் போன்று வேறு எந்த வரவு செலவுத் திட்டத்திலும் முன்வைக்கப் படவில்லை.

யாழ். குடாநாட்டுக்கு நீர்விநியோகத் திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

வறுமை இலங்கையில் மட்டும் இல்லை. உலகின் பல நாடுகளில் தாண்டவமாடுகிறது.

ஆனால் அரசாங்கம் கிராமிய மட்டத்திலிருந்து வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கின்றது. கிராமங்களில் வறுமை ஒழிந்தால் முதலாளிமார் பாதிக்கப்படுவர். அதனால்தான் முதலாளித்துவ வாதிகள் இதனை எதிர்க்கின்றனர்.

அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளால்தான் மஹியங்கனையில் உள்ள வேடுவ இனத் தலைவரும் கைபேசியில் உரையாடுகின்றார்” என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக