26 நவம்பர், 2010

ஜனநாயக காவலன் என கூறும் நாடுகள் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றன



அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதில் சிறுபான்மை மக்களும் பூரண பங்களிப்பு வழங்கவேண்டுமென தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரி வித்தார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதென நாம் ஓய்ந்துவிட முடியாது. சர்வதேச நாடுகளில் அதன் செயற்பாடுகள் துடிப்புடன் இடம்பெறுகின்றன. ஜனநாயகத்தின் காவலர்கள் என்று கூறப்படும் நாடுகளே அதற்கு ஒத்துழைப்பை வழங்குகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள அமைச்சர் ரம்புக்வெல்ல நேற்று தமது அமைச்சில் தமது கடமையைப் பொறுப்பேற்ற பின் ஊடக அமைச்சு, மற்றும் தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றினார். இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

புலிகளின் முக்கியஸ்தரான ருத்ரகுமாரைப் பிரதமராகக் கொண்ட நாடுகடந்த அரசாங்கம் அண்மையில் அமைக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. அதேபோன்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த தமிழ்ச் செல்வனுக்கு பிரான்ஸில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் அந்நாட்டின் பிராந்திய ஆளுநர் ஒருவரே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுள்ளார்.

அரசாங்கம் எத்தகைய தீர்மானங்களை எடுத்த போதும் அதனை சில மணித்தியாலங்களுக்குள் மாற்றவேண்டிய நிர்ப்பந்தத்தை எங்கோ பதுங்கு குழிக்குள் இருந்த ஒரு தனி மனிதன் ஏற்படுத்திய யுகம் ஒன்றை மறந்துவிட முடியாது.

இன்றும் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்ட போதும் புலிகள் அரசாங்கம் அமைத்து தம்மை நிலை நிறுத்திக்கொள்ள முயலும் நடவடிக்கைகள் சர்வதேச மட்டத்தில் இடம்பெறுகின்றன. அதனை சில சர்வதேச நாடுகள் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ள நிலையையும் காணமுடிகிறது.

இந்நிலையில் தனித்துவமும் இறைமையும் உள்ள நாடு என்ற வகையில் நாம் பெற்ற சுதந்திரத்தையும் உரிமையையும் இலங்கையர் என்ற அடையாளத்தையும் பாதுகாப்பதில் நாம் முன்னிற்க வேண்டும். அதற்கு ஊடகத் தகவல் துறை அமைச்சின் பங்களிப்பு மிக விசாலமானது என்பதை உணர்ந்து செயற்படவேண்டும.

காலையில் கடமைக்குச் செல்லும் போதும் அன்றாட செயற்பாடுகளின்போதும் எமது பாதுகாப்புக்கு உத்தரவில்லாத யுகத்தை மாற்றி வாழ்க்கைக்கும் எதிர்காலத்திற்கும் நம்பிக்கையூட்டுகின்ற நிலையை நாட்டில் ஏற்படுத்தித தந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

இன்று இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கிலும் எமது கீர்த்தி விளங்கும் காலம். நாம் இலங்கையர் என்று பெருமையுடன் பறைசாற்றுகின்ற காலம். இத்தகைய சுதந்திரமான நாட்டில் வாழும் நாம் ஜனாதிபதியின் ஆசியாவின் உன்னத நாடு என்ற நோக்கை நிறைவேற்றுவது மட்டுமன்றி உலகின் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு முழுமையான பங்களிப்பினை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக