23 அக்டோபர், 2010

வட பகுதிக்கு விரைவில் இரணைமடு நீர்; வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு

வட பகுதி மக்கள் இரணைமடு நீரை விரைவில் பயன்படுத்த முடியுமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

குடிநீர் விநியோகத் திட்டத்தை விரைந்து செயற்படுத்தி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையைத் தீர்க்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருக்கும் பணிப்புரைக்கமைய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி – யாழ். குடிநீர் விநியோகத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் பூர்த்தியாகிய நிலையில் யாழ். நகரில் நேற்று கிளிநொச்சி – யாழ். திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தை அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் பாரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இரணைமடு குள நீரை யாழ். நகருக்கு கொண்டு வருவதற்கான அபிவிருத்தி கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன,

வடபகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட

வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். இதன் அடிப்படையில் குடிதண்ணீர் மற்றும் அத்துடன் இணைந்த சுகாதார திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து இத்திட்டம் நகர்த்தப்படுகின்றது.

வட மாகாண நீர்வழங்கல் சபையின் திட்டப் பணிப்பாளர் தி. பாரதிதாசன் இதற்காக முன்வைத்த பாரிய முன்மொழிவினை உலக வங்கியும் அரசும் பூரணமாக ஏற்றுள்ளன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரணைமடு குளத்து நீரை வட பகுதிக்கு கொண்டு சென்று குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் அதற்கான முன்னோடி அபிவிருத்திக்குமாக பல தடவைகள் என்னுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார் என்றார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுகையில்,

கடந்த ஐந்து ஆண்டு காலமாக நாம் எடுத்த முயற்சிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விரைவில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் உதவியுடன் இன்னும் இரண்டு ஆண்டுகளில் குடிதண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண தேசிய நீர் வழங்கல் சபையின் திட்டப் பணிப்பாளர் எந்திரி, தி. பாரதிதாசன், யாழ். கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டம் தொடர்பான விரிவான முன்மொழிவினை மக்கள் முன் எடுத்துரைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக