23 அக்டோபர், 2010

சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வருவோருக்கு 10 வருட சிறை குடிவரவுச் சட்டத்தை இறுக்கியது கனடா


கனடாவுக்குள் நுழையும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் மற்றும் ஆட்கடத்தல் களைத் தடுக்கும் நோக்கில் கனேடிய அரசாங்கம், குடிவரவுச் சட்டத்தை மாற்றியமைத்துள்ளது.

சட்ட விரோதமாக கனடாவுக்குள் நுழைபவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் சட்ட மூலம் மாற்றப்பட்டிருப்பதாகக் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்டோவ்ஸ் தெரிவித்தார். இந்த புதிய சட்டத்துக்கமைய சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைபவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது சிறையில் அடைக்கப்படுவதுடன், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் உட்பட அடிப்படை வசதிகள் குறைக்கப்படும்.

மேலும் அவர்களது நிரந்தர வதிவுரிமைக் கோரிக்கை நிராகரிக்கப்படலாமென்றும், அதுமட்டுமின்றி அவர்களின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவர்கள் 5 வருடங்களுக்கு நிரந்தர வதிவிடவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாதென்றும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 50க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக குடியேற்ற வாசிகளை கனடாவுக்குள் அழைத்துச் செல்பவர்களுக்கும் குறைந்தபட்சம் 10 வருட காலச் சிறைத்தண்டனையும் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த கனேடிய அமைச்சர் விக்டோல்ஸ்; கடந்த வருடங்களில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் கனடா வருகை அதிகரித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் அகதிகளுக்கு கனடா வழங்கிவரும் சலுகையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகள்அதிகரித்துள்ளன.

இதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் ஆட்கடத்தல் காரர்களுக்கும், சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 492 இலங்கையர்கள் எம். வி. சன். கூ. கப்பல் மூலம் சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைந்து, தமக்குப் புகலிடம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்தே, கனடா சட்ட விரோதக் குடியேற்ற வாசிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியது.

இதன் ஒரு அங்கமாக ஆட்கடத்தல்காரர் களுக்கும் சட்ட விரோதக் குடியேற்றவாசி களுக்கும் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் குடிவரவுச் சட்டம் நேற்று முன்தினம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கும் பாரியளவில் ஆதரவளிக்கும் நாடாகக் கனடா உள்ளது. ஆனால் இந்தச் சலுகையை யாரும் துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதிக்கப்படாது எனக் கனேடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக