19 செப்டம்பர், 2010

கனடியத் தமிழர் அணிதிரளும் நற்பணி நிதி சேர் நடை


ரொறன்ரோ பொலீஸ் சேவையின் மேலொப்பமிடுதலுடன் கனடிய தமிழர் பேரவை முன்னெடுக்கும் இரண்டாவது ஆண்டு நிதி சேர் நடை இன்று 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

ரொறன்ரோவில் பிறிம்லி-லோறன்ஸ் சந்திப்பின் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கும் தோம்சன் பூங்காவில் காலை 8:30க்கு பங்கேற்பாளர்களின் பதிவுகள் ஆரம்பமாகும்.

கனடியப் புற்றுநோய்ச் சங்கத்திற்கு ஆதரவு வழங்க சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பெருந்திரளான மக்களும் ஊர்ச்சங்கங்களும் சமூக அமைப்புக்களும் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5 கி.மீ நடை கலாச்சார நிகழ்ச்சிகள் சொற்பொழிவுகள் பல்சுவை அறிவுசார் நிகழ்வுகள் பல இடம்பெறவுள்ளன.

"புற்றுநோய் ஆட்கொள்ளும் கனடிய மக்களுக்கு தமிழர்கள் விதிவிலக்கல்ல. தமிழ் சமூகமும் எண்ணிலடங்கா சகோதர சகோதரிகளை இக்கொடும் நோயால் இழந்திருக்கிறது. புற்றுநோயை இல்லாதொழிக்க எமது சமூகம் இந் நிதிசேகரிப்பில் ஒன்றாக இணைந்து குரல்கொடுக்கிறது" என்று கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளர் திரு. டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் தெரிவித்தார்.

புற்றுநோயை எதிர்த்துப்போராடும் அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்ட என்.டீ.பி கட்சியின் தலைவர் திரு. ஜக் லேய்ட்டன் உட்பட வேறுபல பிரமுகர்களும் இக்கொடிய நோயிலிருந்து மீண்டவர்களும் மாண்டவர்களின் உறவினரும் தமது வாழ்வியல் அனுபவத்தை பரிமாறவுள்ளனர். ரொறன்ரோ பொலீஸ் சேவையின் பல காவல் பிரிவுகளும் மூத்த அதிகாரிகளும் 41ம் 43ம் பிரிவு படைகள் தமது பூரண ஒத்துழைப்புடன் இந் நடைபவனியை மேலொப்பமிட ஏற்பாடு செயத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிதி சேர் நடையில் சேகரிக்கப்படும் பணம் முழுவதும் கனடிய புற்றுநோய்ச் சங்கத்தை சென்றடையும்.

"கனடியத் தமிழர் பேரவை முன்னெடுக்கும் இந்நிகழ்வை எண்ணி மிகவும் பெருமையடைகிறோம். இவ்வாறான நிதிசேகரிப்புகள் நாட்டின் முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனங்களின் பரிசோதனைகளுக்கு பலமளிக்கும் அத்துடன் இந்நோயினால் பீடித்து சிகிச்சைபெறும் நபர்களைக் குணப்படுத்தும் சிகிச்சைகளுக்கும் கைகொடுக்கும்" கனடிய புற்றுநோய்ச் சங்கத்தின் ரொறன்ரோ வரி அபிவிருத்தி இயக்குனர் கை லப்போர்ட் கூறினார்.

கனடியத் தமிழ் சமூகத்தின் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் சேவையின் ஏற்பாடுகளில் ஒன்றான இந்நடைமூலம் இக்கொடியநோயை தடுக்கும் வழிமுறைககள் அறிகுறிகள் தமிழ் சமூகத்திற்கு பிரத்தியேகமாக புற்றுநோய் குறித்த குறிப்புகள் போன்றன அறிவுறுத்தப்படும்.

வருடாவருடம் நூறாயிரம் குழந்தைகளுக்கு மேலாக சிகிச்சையளித்துவரும் சிக் கிட்ஸ் நிறுவனத்திற்கு கடந்த வருடம் 40000 டொலர்களை கனடியத் தமிழர் பேரவை சேகரித்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக