22 ஆகஸ்ட், 2010

ஆசிய நாடுகளில் அரிசி உற்பத்தி குறையும் அபாயம்





அதிகரித்து வரும் உலக வெப்பம், மனிதர்கள், விலங்குகளை மட்டுமல்லாது பயிர்களையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்த சில ஆண்டுகளில், ஆசிய நாடுகளில் பெரும்பாலான மக்களின் உணவாக பயன்படும் அரிசி உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (எப்.ஏ.ஓ.,) ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து, கடந்த 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை சீனா, இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் உள்ள நெல் பயிரிடும் 227 இடங்களின் அதிகபட்ச, குறைந்த பட்ச வெப்ப நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.இதில், புவி வெப்பம் அதிகரித்து வருவதால் நெல் உற்பத்தி பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஜர்ரோட் வெல்ச் கூறியதாவது:தினசரி நிலவும் குறைந்தபட்ச இரவு நேர வெப்ப நிலை அதிகரிப்பால், நெல் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது. பகலில் காணப்படும் அதிகபட்ச வெயில் நெற்பயிர் வளர்ச்சிக்கு பெருமளவு உதவுகிறது.ஆனால், இரவில் காணப்படும் அதிகபட்ச வெப்பத்தால் நெற்பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, நெல் மணிகளின் எடை குறைந்து விடுகிறது.உலக வெப்பம் அதிகரித்து வரு வதன் காரணமாக, கடந்த 25 ஆண்டுகளில் நெற்பயிர் உற்பத்தி ஏற்கனவே 10 முதல் 20 சதவீதம் வரை குறைந்து விட்டது.

இவ்வாறு தொடர்ந்து வெப்பம் அதிகரிப்பால் இந்த நூற்றாண்டின் மத்தியில் நெல் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்படும்.தற்போது பகல் நேரத்தில் காணப்படும் மிக அதிகபட்ச வெப்பம் கூட நெல் உற்பத்தியை பாதிக்கும் என்பதால் இழப்பு அதிகமாக இருக்கும். உலகில் உள்ளவர்களில் 300 கோடி மக்களின் தினசரி உணவாக அரிசி உள்ளது.ஆசியாவில் உள்ள 100 கோடி அரிசி சாப்பிடும் ஏழை மக்களில், 60 கோடி மக்களுக்கே தற்போது அரிசி கிடைக்கிறது. நெல் உற்பத்தியில் ஏற்படும் வீழ்ச்சி, அதிகளவு மக்கள் ஏழ்மை நிலைக்கு மாற்றி விடும்.எனவே, நெல் உற்பத்தி முறையை மாற்ற வேண்டும் அல்லது அதிக வெப்ப நிலையை தாங்கி வளரும் நெற்பயிர் ரகத்தை உருவாக்க வேண்டும்.இல்லையென்றால் அடுத்து வரும் 20 அல்லது 30 ஆண்டுகளில் நெல் உற்பத்தியில் பெருமளவில் நஷ்டம் ஏற்படும்.இவ்வாறு ஜர்ரோட் வெல்ச் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக