18 ஆகஸ்ட், 2010

தனியாருக்குரிய காணிகளில் இராணுவ முகாம்கள் இல்லை வடக்கில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரிடம்


வடக்கில் பொது மக்கள் பகுதிகளிலிருந்து இராணுவப் பிரசன்னம் படிப்படியாக அப்புறப்படுத்தப்படுமென்றும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்படுமென்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுமக்கள்
பகுதிகளிலிருந்து இராணுவ பிரசன்னம் படிப்படியாக
நீங்கும்

தனியார் காணிகளில் இராணுவ முகாம் அமைக்கப்படவில்லையென்றும் இராணுவ நிலைகள் அரச காணிகளில் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், வடக்கில் எவ்விதமான இராணுவக் குடியேற்றமும் மேற்கொள்ளப்பட வில்லையென்றும் குறிப்பிட்டார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (17) பிற்பகல் சாட்சியமளித்த பாதுகாப்புச் செயலாளர், பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக் காதிருப்பதை உறுதி செய்வதற்காக இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதுடன் கடல் பாதுகாப்பும் பலப்படுத்தப்படும் என்று கூறினார்.

புலிகள் இயக்கத்தினர் காடுகளில் பயிற்சிகளை மேற்கொண்டதால், வன்னியின் காட்டுப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்ட மா அதிபர் சித்திராஞ்சன் டி சில்வா தலைமையில் கொழும்பு ஏழு, ஹோட்டன் பிளே சிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத் தில் இடம்பெற்ற விசாரணையில் சுமார் இரண்டரை மணித்தியாலமாக பாதுகாப்புச் செயலாளர் சாட்சியமளித்தார்.

பாதுகாப்பு நிலைகளைப் படிப்படியாக வேறிடங்களுக்கு மாற்றி வருகிறோம். ஆனால், தனியார் காணிகளில் எந்தவித இராணுவ முகாமும் அமைக்கப்படவில்லை. பொது மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியும். அரச காணிகளிலேயே பாதுகாப்பை ஸ்தாபித்திருக்கிறோம்.

இராணுவத்தினருக்குக் குடியிருப்புகள் அமைக்கப்படவில்லை. அங்கு கடமையாற்றும் படையினர் தங்குவதற்குப் பாசறைகளே அமைக்கப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்காக அம்பாந்தோட்டை உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களிலும் இராணுவ முகாம்கள் உள்ளன. அதுபோல் வடக்கிலும் அமைத்திருக்க வேண்டிய பாதுகாப்புக் கட்டாயம் இருக்கிறது.

ஆனால், பொது மக்கள் வாழும் பகுதிகளி லிருந்து படைகளை அப்புறப்படுத்துவோம். ஆனால் அது இராணுவத்தை வாபஸ் பெறுவதாக கருத முடியாது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பலாலி உள்ளிட்ட பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. இங்கு தனியார் கட்டடங்கள் பாதுகாப்புக்குத் தேவை எனின் அவற்றிற்கு உரிய நட்டஈட்டைக் கொடுத்து கொள்வனவு செய்வோம்.

அதேநேரம் புலிகள் இயக்கத்தின் தலைமையகங்களையும் பதுங்குக் குழிகளையும் எவரும் உரிமைகோர மாட்டார்கள் என நினைக்கிறேன், என்று தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ஷ, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதும் விடுவிக்கப்பட்டுச் சொந்த இடங்களில் அவர்களின் பெற்றோருடன் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பதினோ ராயிரம் போராளிகள் சரணடைந்தார்கள். இவர்களை மூன்று நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி ஆறு மாதம், ஒரு வருடம், இரண்டு வருடம் எனப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. குறித்த காலம் புனர்வாழ்வு நிறைவடைந்ததும் அவர்களை விடுவித்து விடுவோம். அவர்களுக்குத் தொழிற்பயிற்சிகளையும் அளித்து வருகிறோம்.

இந்தப் பதினோராயிரம் பேரில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆயிரம் பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதும் சிறு சிறு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலர், அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் கடத்தல், கப்பம் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்களே! என்று ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில் “கருணா, பிள்ளையான் குழுக்கள் மற்றும் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய அமைப்புக்களின் ஆயுதங்களைக் களையுமாறு உத்தரவிட்டேன். அரசியல் தலைவர்கள் ஆதரவளிக்கவில்லை. கிரிமினல் குழுக்களே அவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுகின்றன” என்றார். தொடர்ந்து சாட்சியமளித்த பாதுகாப்புச் செயலாளர்,

“யுத்தத்தின் போது ஆறாயிரம் படையினர் கொல்லப்பட்டு முப்பதாயிரம் பேர் காயமுற்றார்கள். இதன்மூலம் புலிகள் எத்தகைய தாக்குதல் பலத்தைக் கொண்டிருந்தார்களென்று புரிந்து கொள்ள முடியும். அதேநேரம் இந்தளவு இராணுவத்துக்கு இழப்பு ஏற்பட்டதென்றால், புலிகளுக்கு ஏற்பட்ட இழப்பையும் நாம் ஊகித்துக் கொள்ள முடியும்.

ஆனால், எவரும் அதனைப் பேசுகிறார்கள் இல்லை. சிவிலியன்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள். சிவிலியன்களுடன் புலிகள் கலந்திருந்தார்கள். அதனால், காயமடைந்த புலி உறுப்பினர்களையும் சிவிலியன்களாகக் கணக்கிடுகிறார்கள்” என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக