18 ஆகஸ்ட், 2010

இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் சபையில் எதிர்ப்பு

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப் படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை கடும் எதிர் ப்பை தெரிவித்தமையினால் சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.

போலியான இராணுவ நீதிமன்றத்தின் மூலம் பதக்கங்களை பறிக்க முடியாது என்று சுட்டிக் காட்டிய எதிர்க்கட்சிகள் அவ்வாறான இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கைகளை சபையில் ஆற்றுப்படுத்துமாறும் கோரி நின்றனர்.

எதிர்க்கட்சியினரின் கடுமையான எதிர்ப்பை அடுத்து சபை நடவடிக்கைகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டதுடன் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்தன.

பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவை திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தை நீதித்துறை அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன சட்ட மூலத்தை சமர்ப்பித்து உரையாற்றியதன் பின்னர் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து எதிர்க்கட்சி தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியதுடன் இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கைகளை சபைக்கு ஆற்றுப்படுத்துமாறும் கோரினார்.

இதனிடையே எழுந்த ஜனநாயக தேசியக் கூட்டணியின் எம்.பி. யான அனுர குமார திஸாநாயக்க ஒழுங்கு பிரச்சினையொன்றை முன் வைத்தார். இதன்போது அக்கிராசனத்தில் குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் இருந்தார்.

அனுர குமாரதிஸக்ஷிநாயக்கவின் ஒழுங்கு பிரச்சினையுடன் எதிர்க்கட்சிகள் தங்களுடைய ஆசனங்களுக்கு முன்பாக எழுந்து நின்றதுடன் தயாசிறி எம்.பி. சபா பீடத்திற்கு அருகில் சென்றார். இதன் போது பிற்பகல் 2.40 மணிக்கு குழுக்களின் பிரதித் தலைவர் அவையை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

சரத் பொன்சேகாவை சூழ்ந்த எம்.பி.க்கள்

சபை ஒத்தி வைக்கப்பட்டபோது சரத் பொன்சேகா எம்.பி.யை எதிர்க்கட்சிகள் எம்.பி. க்கள் சூழ்ந்து கொண்டு உøரயாடிக் கொண்டிருந்தனர்.ஐ.தே.க. எம்.பி. க்களான ரவி கருணக்ஷிநாயக்க, ஜோன் மைக்கல் பெரேரா மற்றும் எம்.பி. பிரதமர் தி.மு. ஜயரட்னவிடம் உரையாடிக் கொண்டிருந்தனர்.இதேவேளை ஐ.தே.க. எம்.பி. க்களான ரவி கருணாநாயக்க மற்றும் தயாசிரி ஆகியோர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. யுடன் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தனர்.

இதனிடையே சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் சபை மீண்டும் 2.50 மணிக்கு கூடியது. அப்போது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உரையாற்றுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதனிடையே எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் எதிர்ப்பினை தெரிவித்தனர். இதனிடையே ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய அனுர குமார திஸாநாயக்க எம்.பி. நீதி சட்ட மூலத்தை நாமே உருவாக்கி கொடுக்கின்றோம். எனினும் அந்தச் சட்டம் வெளியில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று சுட்டிக் காட்டினார்.

இதனிடையே எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க சபை ஒத்தி வைக்கப்பட்டதா? இடை நிறுத்தப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியதுடன் "பதிவை' கேட்டு விட்டு வந்து சபை நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லுமாறு ஆலோசனை வழங்கினார்.மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை மீண்டுமொரு தடவை ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தயாசிறி ஜயசேகர எம்.பி. அவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் எனது நேரம் குறித்து கேட்டறிவதற்கு சபா பீடத்தை நோக்கி இறங்கி ஓடினேன் அவர் (சபைக்கு தலைமை தாங்கியவர்) ஆசனத்திலிருந்து எழுந்து ஓடி விட்டார் என்றார்.

இதனிடையே எழுந்த ஆளும் கட்சி எம்.பி. யான அஸ்வர் எதிர்க்கட்சி தலைவர் நீதிபதிகளையும் நீதிமன்றங்களையும் தீர்ப்புகளையும் விமர்சிக்கின்றார் அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கு விமர்சிக்க முடியாது ஜனாதிபதியின் தீர்மானத்தை மதிக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டினார்.மீண்டும் குறுக்கிட்ட ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற தொகுதியும் இராணுவ நீதிமன்றமும் வேறு வேறுபட்டது. சபை ஒத்திவைக்கப்பட்டமையால் அவையில் "வெற்றிடம்' நிரம்பியுள்ளது. சபையை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது என்றார்.

சந்திரகுமார் விளக்கம் இதனிடையே எழுந்த குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் நான் அவை நடவடிக்கைகளை ஐந்து நிமிடங்களுக்கு இடை நிறுத்தி வைத்தேன். கூச்சல் குழப்பத்தினால் நான் கூறியமை உங்களுக்கு கேட்காமல் இருந்திருக்கலாம் என்று சுட்டிக் காட்டினார். இதனிடையே எழுந்த அனுர குமார திஸாநாயக்க போலியான இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது அந்த போலியான அறிக்கையை அகற்ற வேண்டும்.பாராளுமன்றத்தில் அமுல்படுத்தப்படும் சட்டம் வெளியில் நடைமுறைப்படுத்துவதில்லை என்பதனால் இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கையை சபையில் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று கோரி நின்றார்.

வாத விவாதங்களை அவதானித்த சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளும் இராணுவ நடவடிக்கைகளும் வேறு வேறு என்று சுட்டிக் காட்டினார். இதனிடையே எழுந்த ஆளும் கட்சி பிரதம கொறடாவான தினேஷ் குணவர்த்தன சபாநாயகரின் தீர்ப்பை விமர்சிக்கவோ, விவாதிக்கவோ முடியாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது. தீர்ப்பு தவறானதாயினும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாத, விவாதங்கள், ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்து மோதல்கள் அமளி துமளிக்கு மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்கள் இவற்றை அவதானித்துக் கொண்டு அமைதியாகவே இருந்தனர். தொடர்ந்தும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக