7 ஜூலை, 2010

ஜனாதிபதி பதவிக்கால நீடிப்புக்கு ஐதேக எதிர்ப்பு தெரிவிக்கும் : கண்டியில் ரணில் உரை

தற்போது பதவியிலுள்ள ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்திற்கான சத்தியப் பிரமாணம் கூடச் செய்யப்படாத நிலையில், எல்லையில்லாத பதவிக்கால நீடிப்பு தொடர்பாக அரசு கொண்டு வரவுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐ.தே.கட்சி, நாடாளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கண்டி சுயீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற ஐ.தே.க. உறுப்பினர்களின் கூட்டமொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்கா, காமினி ஜயவிக்ரம பெரேரா, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் ஐ.தே.க. உள்ளூராட்சி அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு மேலும் உரை நிகழ்த்திய ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாவது:

"தற்போது பதவியிலுள்ள ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்திற்கான சத்தியப்பிரமாணம் கூடச் செய்யப்படாத நிலையில், எல்லையில்லாத பதவிக்கால நீடிப்பு தொடர்பாக அரசு கொண்டு வரவுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐ.தே.க., நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எதிர்ப்பைத் தெரிவிக்கும்.

இன்றைய நிலையில் எதிர்க்கட்சியின் பொறுப்பை நாம் சரியாக நிறைவேற்றுகிறோமா என்பதை பொது மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

எனவேதான் எமது பொறுப்பு என்ற வகையில் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எமது எதிர்ப்பைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த எதிர்ப்பு கீழ்மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும்.

இன்று இங்கு கூடியுள்ள நீங்களும் பிரதேச சபை அங்கத்தவர்களும் மற்றும் தேவையான அமைப்புக்களையும் ஒன்றிணைத்து இதுபற்றித் தெளிவுபடுத்த வேண்டும். பல அமைப்புக்கள் இது விடயமாகத் தமது எதிர்ப்புக்களைத் தெரிவிக்கக் காத்திருக்கின்றன. அவ்வாறான சகல சக்திகளையும் நீங்கள் ஒன்றிணைக்க வேண்டும்.

நாட்டு மக்களுக்கு நன்மை தரும் சீர்திருத்தங்களுக்கு நாம் முழு அளவில் ஆதரவு தெரிவிக்கத் தயாராகவுள்ளோம். நாடாளுமன்றத்தில் விவாதித்து தேவையான திருத்தங்களைச் செய்து நீதிமன்ற அனுமதிமூலம் அவற்றை மாற்றுவதற்கு ஆதரவளிக்க முடியும்.

ஆனால் கடந்த கால தேர்தல் எதிலும் தெரிவிக்காத ஒருவிடயத்தை மக்கள் ஆணையின்றி அவசர அவசரமாக அதுவும் இரகசியமாக முன்வைக்க வேண்டிய அவசியமென்ன?

இரண்டாவது பதவிகாலம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. இந்நிலையில் மூன்றாவது அல்லது அதற்கு மேற்பட்ட பதவிக் காலம் பற்றி இப்பொழுது ஏன் அவசரப்படவேண்டும்? " இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

ரவி கருணாநாயக்க

ரவி கருணாநாயக்க பேசுகையில்,

"ஒரு கட்சிக்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஒற்றுமையும் அவசியம். முதலில் அதனை நாம் மேற்கொள்வோம் ஐ.தே.க. என்பது நீண்ட வரலாறு கொண்டது. அதேபோல் பெரும் அரசியல் தலைவர்கள் இருந்த கட்சியுமாகும்.

இப்போது பதவியிலிருக்கும் ஜனாதிபதியும் முன்னைய ஜனாதிபதி சந்திரிக்கா உட்பட 1978 முதல் ஆட்சி நடத்தும் சகலரும் தமது ஆட்சிக்கு உதவியாகக் கொள்வது, அன்று ஜே.ஆர் ஜெயவர்தனா கொண்டுவந்த அரசியலமைப்பேயாகும். எனவே எமது கட்சியை எவரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" என்றார்.

திஸ்ஸ அத்தனாயக்க, காமினி ஜயவிக்ரம பெரேரா, லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட மற்றும் பலர் கூட்டத்தில் உரையாற்றினர்.

கூட்டத்தில், 13,17 ஆவது அரசியலமைப்பு திருத்தம், அவசரகால சட்ட நீடிப்பு, ஜனாதிபதி பதவி நீடிப்பு, மாகாண சபைகளுக்குப் போதிய அதிகாரம் வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் குறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்குதல் உட்பட எட்டுப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக