7 ஜூலை, 2010

அசினின் படங்களுக்கு தமிழ்நாட்டில் தடை

இலங்கையில் இடம்பெற்று வரும் ரெடி திரைப்படப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தென்னிந்திய முன்னணி நடிகை அசினின் படங்களுக்கு தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கத்தினர் தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளனர் என இன்போசிரா செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

நடிகை அசினின் செயற்பாடு இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டே இத்தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளது. நீண்ட காலமாக இலங்கைத் தமிழர்கள் துன்பங்கள் அனுபவித்து வருவதையிட்டு இலங்கையில் நடைபெறும் எந்தவொரு கலை கலாசார நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதில் தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கத்தினர் உறுதியாக இருந்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற ஐபா விருது வழங்கல் விழாவை இவர்கள் பகிஷ்கரித்திருந்தனர். இதனையடுத்து முன்னனி நடிகர் நடிகைகளான அமிதாப் பச்சன், ஷாருக் கான், நமீதா மற்றும் க்ஷீஐனெலியா போன்றோர் ஐபா நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை கடும் பகிஷ்கரிப்புகளின் மத்தியிலும் சல்மான் கான், விவேக் ஒபரோய், சயிப் அலி கான், ஹிர்த்திக் றொஷான் மற்றும் லாரா தத்தா ஆகிய நடிகர் நடிகைகள் ஐபா நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன் எதிரொலியாக இவர்களின் திரைப்படங்களும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

மேற்படி திரைப்படத்தின் படப்பிடிப்பு மொரிஷியஸ் நாட்டிலேயே இடம்பெறவிருந்தது. எனினும் இதனை சல்மான் கான் இலங்கைக்கு மாற்றியுள்ளார். ரெடி படத்திற்கான படப்பிடிப்பு ஏற்பாட்டின்படி தெரிவு செய்யப்பட்ட இடத்தில் தனது கடமையை கச்சிதமாக நிறைவேற்றியுள்ளதாக அசின் எண்ணியுள்ளார். இருப்பினும் சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்டுள்ள நடிகை அசின் அவரது படங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பிலான பிரச்சினையை உறுதியாக எதிர்கொண்டு நிற்கின்றார். தற்போது கொலிவூட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள அசினின் படங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை அவரது தொழிலைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக