28 ஜூன், 2010

நிரந்தர இராணுவ கட்டமைப்புக்கள் வடக்கு கிழக்கில் அமைக்கப்படும்


இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அப் பிரதேசங்களில் நிரந்தர இராணுவ கட்டமைப்புகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று முன்தினம் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின்னர் உரையாற்றுகையிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்த முப்பதாண்டு கால பயங்கரவாத யுத்தத்திலிருந்து நாடு விடுதலையடைந்து தற்போது ஒரு வருட காலம் கடந்துள்ளது. இந்த நிலையில் நாடு அடைந்த விடுதலையை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக யுத்தம் நடைபெற்ற இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலையான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு அமைவாகவே வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நிரந்தர இராணுவ முகாம்களை அமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்படி முகாம்கள் படை வீரர்களின் உதவிகளுடனேயே அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் இப் பிரதேசங்களில் கடமையில் ஈடுபடும் இராணுவ வீரர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பாகவும் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தங்குமிட வசதிகள் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. எவ்வாறாயினும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும். மீண்டும் ஒரு பயங்கரவாதப் போரை இலங்கையில் உருவாக இடமளிக்கக் கூடாது எனக் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக