28 ஜூன், 2010

விலைவீழ்ச்சி- விவசாயிகள் கவலை






நெல் விவசாயி
இலங்கையில் அண்மைக் காலங்களில் நெல்லின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக நியாய விலைக்கு சந்தைப்படுத்தல் வாய்ப்பின்றி சிரமப்படுவதாக விவசாயிகள் பரவலாக புகார் தெரிவிக்கின்றார்கள்.

ஒரு கிலோ நெல்லின் அரச நிர்ணய விலை 28 ரூபாய் 30 சதம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தனியார் துறையினரால் 20 முதல் 22 ரூபாய்க்கே நெல் கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அநேகமான விவசாயிகள் தமது அறுவடையை சந்தைப்படுத்த இயலாதநிலை மட்டுமன்றி களஞ்சிய வசதிகள் கூட இன்றி சிரமப்படுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பெரும் போகத்தின் போது அறுவடை செய்யப்பட்ட நெல் 40 முதல் 45 சத வீதமே இது வரை சந்தைப் படுத்தப்பட்டுள்ளதாக வவுணதீவு பிரதேச கமநல சேவைகள் குழுவின் செயலாளரான கே.ரத்னசிங்கம் கூறுகின்றார்.

இதே வேளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர் நோக்கும் இந்தப் பிரச்சினை குறித்து தான் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகக் கூறுகின்றார்.

எதிர் வரும் செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது விவசாயிகளின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

இதற்கிடையில் இப்பிரச்சினைகளை உடன் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரை ஜனாதிபதி பணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக