28 ஜூன், 2010

கட்டுநாயக்க - போபால் நேரடி விமான சேவையினால் சாஞ்சி புனித தலத்துக்கு இலகுவில் செல்ல வாய்ப்பு



ஜனாதிபதி மஹிந்த - இந்திய மத்திய பிரதேச முதல்வர் சந்திப்பில் தீர்மானம்


இந்தியாவின் போபால் பிராந்திய விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டதுடன் இலங்கையர்கள் நேரடியாக போபால் சென்றடைய முடியுமென இங்கு வந்திருக்கும் இந்தியாவின் மத்திய பிரதேஷ் முதலமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்தார்.

தமது இந்தத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரிதும் வரவேற்றதுடன் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கை வந்த இந்திய மத்திய பிரதேஷ் முதலமைச்சர் நேற்றுக் காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கைக்கு பெளத்த மதத்தை எடுத்துவந்த சங்கமித்தை பிக்குனி மற்றும் மஹிந்த தேரர் ஆகியோரின் பிறப்பிடமான சாஞ்சியை பெளத்தர்களின் வணக்கஸ்தலமாக பிரகடனப்படுத்துவதன் மூலம் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான உறவை மேலும் பலப்படுத்த முடிவதுடன் இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க முடியுமென நம்புவதாகவும் மத்திய பிரதேஷ் முதலமைச்சர் சிவராஜ் சிங் கூறினார்.

போபால் பிராந்திய விமான நிலை யத்திலிருந்து சுமார் 30 தொடக்கம் 40 நிமிடங்களுக்குள் தரை மார்க்கமாக சாஞ்சியை சென்றடைய முடியுமெனவும் அவர் கூறினார்.

இதனைத் தவிர, நீர் வழங்கல் வடி காலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்த வருடம் மத்திய பிரதேஷ் மாநி லத்திற்கு விஜயம் செய்தபோது கேட் டுக்கொண்டதற்கமைய அங்கு சர்வதேச பெளத்த பல்கலைக்கழகம் ஒன்றை நிறு வுவதற்கு இணங்கியிருப்பதுடன் அதற்கென 65 ஏக்கர் காணியையும் 25 மில்லியன் இலங்கை ரூபாவினையும் மத்திய பிர தேஷ் மாநிலம் வழங்க முன்வந்துள்ள தெனவும் முதலமைச்சர் சிவராஜ் சிங் கூறினார்.

மேலும் இலங்கை - இந்திய உறவை பலப்படுத்தும் வகையில் 2600வது சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் இவ்வருட இறுதியில் மூன்று நாள் கலை நிகழ்வுகள் நடத்துவதற்கு தீர் மானித்துள்ளோம்.

ஒக்டோபர் 22ஆம் 23ஆம் திகதிகளில் கஜுராவோவில் வர்த்தகர் களுக்கான மாநாடு நடத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தக குழுவொன்றும் இல ங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் எனக் கூறிய முதலமைச்சர் இரு நாடுகளும் அபிவிருத்தியில் பாரிய வளர்ச்சி காண வேண்டுமென்பதே எமது விஜயத்தின் நோக்கமெனவும் கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, மத்திய பிரதேஷ் முதலமைச்சரின் செயலாளர் ஸ்ரீ அனுராக் ஜெயின், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ சந்தன் மித்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக