செய்தியாளர் சந்திப்பில் ஹில்லாரி கிளிண்டனுடன் ஜி.எல்.பீரிஸ்
அமெரிக்க ராஜாங்க அமைச்சருடன் இலங்கை வெளியுறவு அமைச்சர்
இலங்கயில் யுத்தத்துக்கு பின்னர் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் தன்னளவில் ஏற்படுத்தியுள்ள ஆணையத்துக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டளவில் ஆணையம் அமைக்கப்படுதற்கு தான் ஆதரவு தருவதாகக் கூறியுள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அம்மையார், இந்த ஆணையத்துக்கு போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான அதிகாரமும் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
போர்க் குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் விமர்சகர்கள் விரும்புகின்றனர்.
ஆனால் இலங்கையில் யுத்தத்தின் கடைசி ஏழு ஆண்டுகள் காலப் பகுதியில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, இன நல்லிணக்கத்துக்கான வழிவகைகளையும் ஆராய்வதற்காக எட்டு பேர் கொண்ட ஆணையத்தையே இலங்கை அரசாங்கம் அண்மையில் அமைத்துள்ளது.
பீரிஸ்- கிளிண்டன் சந்திப்பு
இந்நிலையில் வாஷிங்டனில் இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் உரையாடிவிட்டு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கிளிண்டன் அம்மையார் இந்த ஆணையத்துக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார்.
"இலங்கையில் அரசியல் ரீதியிலும் இன ரீதியிலும் நல்லிணக்கம் ஏற்படுவதை அமெரிக்கா வலுவாக ஆதரிக்கிறது. உள்நாட்டளவில் நெருக்கடி மிக்க காலகட்டங்களில் இருந்து வெளிவந்திருந்த மற்ற நாடுகளில் இப்படியான விசாரணை ஆணையங்கள், நடந்த தவறுகளுக்கு பதில் தருவதிலும், நடந்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள் அவற்றுக்கு பொறுப்பேற்கவைப்பது என்பதிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. மற்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த இப்படியான ஆணையங்கள் பயன்படுத்தியிருந்த சிறந்த வழிகளை எல்லாம் இலங்கையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையம் கைகொள்ள வேண்டும்." என்றார் அவர்.
'நடந்த சம்பவங்கள்' என்று குறிப்பிட்டு அந்த சம்பவங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை ஆராய்கின்ற அதிகாரம் இலங்கை நல்லிணக்க ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 'போர்க் குற்றங்கள்' என்பது இந்த ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இந்த வாரம் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்திருந்த ஒரு செவ்வியில், "குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால் பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்காக எவர் ஒருவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
விமர்சனங்கள்
இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் தொடர்ந்து சர்வதேச அளவிலும் உள்நாட்டு அளவிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
புதிய ஆணையத்துக்கு எதிராக எழுந்துள்ள சமீபத்திய விமர்சனம் என்பது, இலங்கை அரசாங்கத்தில் முந்தைய விசாரணைக் குழுக்களின் உறுப்பினராகவும் இலங்கை அரசாங்கத்தின் ஆலோகராகவும் இருந்த எம்.சி.எம். இக்பால் என்பவரிடமிருந்து வந்துள்ளது.
"இப்படியான விசாரணை ஆணையங்கள் நீதியை நிலைநாட்டுவதில் அடுத்ததுடுத்து ஆட்சியில் இருந்தவர்களும் தொடர்ந்தும் தவறிவந்துள்ளனர் . தவிர தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் உறுப்பினர்கள் பக்கச்சார்பின்றி செயல்படக்கூடியவர்கள் அல்ல." என்றும் இவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக