16 மே, 2010

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்று சேரும் பயங்கரவாதிகள்


இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்து வருகின்றனர். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவவும் முற்பட்டுள்ளனர். இது தொடர்பாக, கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை ஒட்டிய பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளும், அரசியல் தலைவர்களும் கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள நீலம் பள்ளத்தாக்கில், புதிய மனிதர்கள் பலர் தென்படுகின்றனர். இவர்கள் எல்லாம் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களின் தோற்றமும், அவர்கள் பேசும் மொழியும், அவர்கள் உள்ளூர்வாசிகள் இல்லை என்பதைக் காட்டுகின்றன.

கடந்த சில வாரங்களாக, பயங்கரவாதிகளின் ஜிகாதி நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. இவர்கள் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, காஷ்மீருக்குள் செல்ல முற்பட்டுள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு அமைதி பேச்சு வார்த்தைகளையும் சீர்குலைக்க அவர்கள் முற்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் ஊடுருவலால், நீலம் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் பீதியில் இருக்கின்றனர். பயங்கரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முற்பட்டால், இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டையும் ஆரம்பித்து விடும். இவ்வாறு உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக