16 மே, 2010

95 வகை மருந்துகள் ஒரு வாரத்திற்குள் இறக்குமதி; இலங்கை அதிகாரிகள் இன்று இந்தியாவுக்கு அவசர பயணம்






அரசாங்க ஆஸ்பத்திரிகளில் தற்போது தட்டுப்பாடு நிலவும் 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உடனடியாகக் கொள்வனவு செய்யவென அரசாங்கம் விசேட குழுவொன்றை இன்று (17 ம் திகதி) இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஏற்பாட்டில் இன்று இந்தியாவுக்கு பயணமாகும் இக் குழுவில் மருந்துப் பொருள் விநியோகப் பிரிவு பணிப்பாளர், அரசாங்க மருந்துப் பொருள் கூட்டுத்தாபன பிரதி முகாமையாளர், தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையின் மருந்தாளர், சுகாதார அமைச்சின் பிரதம மருந்தாளர், நிதியமைச்சு பிரதிநிதி ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இன்று இந்தியாவுக்கு பயணமாகும் இக் குழுவினர் இலங்கைக்கு மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளை மும்பாய் நகரில் சந்திக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

மேற்படி 95 அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கேள்விப் பத்திரங்களை இக் குழுவினர் இந்திய நிறுவனங்களிடமிருந்து இன்று பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர்.

இந் நிறுவனங்கள் தங்களிடமுள்ள மருந்துப் பொருட்களின் அளவு, அவற்றின் விலை, இலங்கை தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையில் மருந்து பொருளை விநியோகிப்பதற்குப் பதிவு செய்துள்ள விபரம் என்பவற்றை இக் குழுவினருக்கு சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கேள்விபத்திரங்களைப் பெற்றுக் கொண்டதும் அவற்றை பரிசீலனைக்கு உட்படுத்தி மருந்துப் பொருள் விநியோகிக்கவென தகுதியான நிறுவனம் தெரிவு செய்யப்படும்.

அதனைத் தொடர்ந்து விமானம் மூலமோ, கப்பல் மூலமோ குறித்த மருந்துப் பொருட்களை ஒரு வார காலத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அந்தவிநியோக நிறுவனம் கேட்டுக் கொள்ளப்படும் என்று அமைச்சு அதிகாரியொருவர் கூறினார். தரமான மருந்துப் பொருட்களைக் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதில் அதிக கவனம் செலுத்துமாறு அமைச்சர் சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக