16 மே, 2010

காணி அபகரிப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது - என்கிறார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன்



கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்பேசும் மக்களுக்குச் சொந்தமான காணிகளுக்கு பெரும்பான்மை இனமக்கள் உரிமை கோரும் விடயம் தொடர்பிலோ அல்லது அவற்றினை அபகரித்து கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றமை குறித்தோ தனக்கு எதுவும் தெரியாதெனக் கூறும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திர காந்தன், இந்த விவகாரம் தொடர்பில் தனக்கு தனிப்பட்டமுறையில் கூட முறைப்பாடுகள் செய்யப்படவில்லையென்றும் தெரிவிக்கிறார்.

"கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பெரும்பான்மை இன மக்களால் அபகரிக்கப்படும் முயற்சி தொடர்பில் முதலமைச்சர் என்ற வகையில் தாங்கள் ஏதும் நடவடிக்கைகளை மேற்கொண்டீர்களா' என்று வீரகேசரி வாரவெளியீடு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"தமது காணிகள் அபகரிக்கப்பட்டமை தொட ர்பில் ஆதாரங்களுடன் அவர்கள் தெரிவித்தால் அது குறித்து ஆராய முடியும். ஆனால், எந்த முறைப்பாடும் கிடைக்காத நிலையில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதெனவும் அவர் மேலும் கூறினார். இதேவேளை, இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த குச்சவெளி பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன், "தனது பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள காணிகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக எனக்கு அறியக்கிடைத்துள்ளது. சிலர் என்னிடம் முறையிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் குறிப்பிட்ட காணிகள் தமக்குரியதெனக் கூறி ஆதாரங்களைச் சமர்ப்பிக்கின்றனர். ஆனால், அந்த ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின்னரே தீர்மானத்தை எடுக்கமுடியும்' எனக் கூறினார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் மொரவௌ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள பன்குளம் பகுதியில் தமிழர்களுக்குச் சொந்தமான நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பெரும்பான்மை இனத்தவர்களக்ஷில் பலாத்காரமாகச் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காணிகளின் சொந்தக்காரர்கள் இருக்கும்போதே இவை பலாத்காரமாக கைப்பற்றப்படுவதாக இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் ஜனாதிபதிக்கும் உரிய அதிகாரிகளுக்கும் அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பான்மை இனத்தவர்களால் இவ்வாறு பலாத்காரமாகக் காணிகளைக் கைப்பற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் உட்பட ஆதாரங்கள் இருந்தும் கூட இவ்வாறு நடப்பது தொடர்பில் உள்ளூர் மட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்தும் இது தொடர்பில் பராமுகமாகவே அவர்கள் செயற்படுவதாக அந்தச் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இதேவேளை, திருமலை மாவட்டத்திலுள்ள ஒட்டுபடுகொடு என்ற தமிழ்ப் பிரதேசத்திலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான 800 ஏக்கர் வயற் காணிகளில் இதுவரை 200 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களால் பலாத்காரமாக அபகரிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரொருவர் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

"தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையிலும் இவ்வாறு நடப்பதனை தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களைத் திட்டமிட்டு கபளீகரம் செய்யும் ஒரு முன்னோடி நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது' எனவும் அவர் தெரி வித்தார். குறித்த காணிகள் தொடர்பில் எங்கும் எவரிடமும் முறைப்பாடு செய்யக் கூடாதெனவும் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளாலும் படைதரப்பினராலும் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, திருமலை, இக்பால் நகரிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான மீன்வாடிகள் அமைந்துள்ள காணிகளையும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் தங்களுக்குச் சொந்தமெனக் கூறிக்கொண்டு அவற்றினைத் தம்வசப்படுத்தும் முயற்சிகளும் கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த விடயம் குறித்து குச்சவெளி பிரதேச செயலாளர் மகேஸ்வரனின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று அவசரக் கூட்டம்

திருகோணமலையிலுள்ள முஸ்லிம்களின் காணிகள் தொடர்பில் அவர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் திருமலை மாவட்ட எல்லை நிர்ணம் தொடர்பில் ஆராயும் வகையில் திருமலை மாவட்ட முஸ்லிம் சமாதான செயலகம், அரச சார்பற்ற நிறுவனங்கள் திருமலை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் இணைந்து இன்று கலந்துரையாடலொன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் ஆதம்பாவா தௌபீக் தெரிவித்தார். கிண்ணியா நூலக கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக