16 மே, 2010

மே 17 துக்க தினத்தை அமைதியாக அனுஷ்டியுங்கள்- கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் வேண்டுகோள்

உச்சக் கட்டப் போரின்போது பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல இலட்சக்கணக்கானோர் பல்வேறு பாரிய பாதிப்புகளுடன் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு துக்கம் தெரிவித்து நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள துக்க தினத்தைத் தமிழ் மக்கள் அமைதியான முறை யில் அனுஷ்டிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வருடாந்தம் மே மாதத்தில் வரும் 17 ஆம் திகதியை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதன்படி முதலாவது துக்க தினத்தை நாளை திங்கட்கிழமை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், "வடக்கு, கிழக்கிலுள்ள கோயில்கள், தேவா லயங்களில் நாளை விசேட மதவழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டு, கொடூர யுத்தத்தில் பலிக்கடாக் களாக்கப்பட்ட தமது உடன் பிறப்புகளின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை புரியுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்' என்றார்.

அதேவேளை, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மன்னார், வவுனியா உட்பட முக்கிய இடங்களில் பொதுக் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து ஓராண்டு நிறைவையொட்டி நாடெங்கும் அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, "நாங்கள் அழுது கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க தென்னிலங்கையில் அரசாங்கம் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்துவதா, என்று கேள்வி எழுப்பியுள்ளார். "இதனை எங்களால் ஜீரணிக்க முடியாதுள்ளது. ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம். எங்களது மக்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அரசாங்கமோ இராணுவ ரீதியான கொண்டாட்டங்களை நடத்துவதனை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது' என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக