16 மே, 2010

புலிகளின் ஆதரவாளர்களுக்கு உதவ வேண்டாம்'

விடுதலைப் புலிகளின் இயக்கம் மீண்டும் வலுப்பெற எந்த வகையிலும் உதவ வேண்டாம் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

பெல்ஜியம், லக்சம்பர்க், ஐரோப்பிய யூனியனுக்கு இலங்கையின் தூதராகச் செயல்படும் ரவிநாத ஆரியசின்ஹ இந்த வேண்டுகோளை இலங்கை அரசின் சார்பில் விடுத்திருக்கிறார்.

பயங்கரவாதச் சூழல், ஐரோப்பிய யூனியனில்அதிகரித்துவரும் பயங்கரவாதப் போக்கு என்ற பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் தூதர்களாகப் பதவி வகிப்போர் பங்கேற்றனர். பிரùஸல்ஸ் நகரில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பேசுகையில் ஆரியசின்ஹ இந்த வேண்டுகோளை விடுத்தார்.

"தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்ற பிறகு ஒரு துப்பாக்கி குண்டு கூட இலங்கையில் சுடப்படவில்லை. ஏதோ ஒரு அனுதாபத்தில் நீங்கள் செய்யும் உதவிகளால் அந்த அமைதி மீண்டும் குலைவதற்கு நீங்கள் காரணமாக இருக்காதீர்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ""நாடு கடந்த அரசாக'' நிர்வகிக்க அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் முயல்கின்றனர். அவர்களுக்கு எந்த விதத்திலும் யாரும் உதவிகளைச் செய்யக்கூடாது.

சர்வதேசச் சட்டங்களை மீறியதற்காகவும் பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதம் வழங்கியதற்காகவும் நிதி திரட்டியதற்காகவும் உங்கள் நாடுகளில் பல விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவதாகவும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்படுவதாகவும் செய்திகளைப் படிக்கிறேன்.

இப்படி ஆங்காங்கே எஞ்சியிருக்கிற விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் மற்றவர்களும் போலியாக அமைப்புகளை ஏற்படுத்தி, தேர்தலை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் வெறும் தீவிரவாத இயக்கம் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் நல்ல வலைப்பின்னல் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கும் இயக்கமாகும்.

அந்த அமைப்புக்குள்ள சொத்துகள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு நபர்களிடம் பிரிந்துள்ளன. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நேரடியாகத் தங்கள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு பெயர்களில் பல இயக்கங்களைத் தோற்றுவித்து அவற்றின் மூலமாகச் செயல்பட்டு வருகின்றனர். அனுதாபப்பட்டு அவர்களுக்கு இடம் கொடுத்தால் மீண்டும் பயங்கரவாதம்தான் தலைதூக்கும்' என்று அவர் எச்சரித்தார்.

ஜி-15க்கும் ராஜபட்ச தலைவர்: இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளின் குழுமத்துக்கு புதிய தலைவராக இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச வரும் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொள்கிறார். வரும் 2 ஆண்டுகளுக்கு அவர்தான் தலைவர்.

அடுத்த ஜி-15 உச்சி மாநாடு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.

அல்ஜீரியா, அர்ஜென்டீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, ஈரானின் இஸ்லாமியக் குடியரசு, ஜமைக்கா, கென்யா, மலேசியா, மெக்சிகோ, நைஜீரியா, செனகல், இலங்கை, வெனிசுலா, ஜிம்பாப்வே ஆகியவை ஜி-15 அமைப்பில் இடம் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக