27 மே, 2010

போர் நடந்த இடங்களில் அமைதி : மந்திரி பெரிஸ் தகவல்





இலங்கையில் 25 ஆண்டுகளாக சண்டை நடந்த பகுதியில், 2 லட்சத்து 97 ஆயிரம் பேர் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என, வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ் தெரிவித்துள்ளார். போர் நடந்த இடங்களில் அமைதி தற்போது தவழ்வதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை சந்தித்து பேசுகிறார்.

இலங்கை அமைச்சர் பெரிஸ், நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளாக சண்டை நடந்த பகுதிகளில், 2 லட்சத்து 97 ஆயிரம் மக்களை மீண்டும் குடியமர்த்தியுள்ளோம். தற்போது இலங்கையில் புதிய சூழல் நிலவுகிறது. இலங்கையில் பயங்கரவாதம் முறியடித்த பிறகு, அளப்பரிய தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அரசியல் ஸ்திரத்தன்மை தற்போது ஏற்பட்டுள்ளது.

புலிகளுடனான போர் முடிந்த பிறகு, வேறெந்த பயங்கரவாத நடவடிக்கையும் நடக்கவில்லை. மக்களின் மனநிலை மாறிவிட்டது. கடும் போர் நடந்த பகுதியில் சீரமைப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. திரிகோணமலை, கிளிநொச்சி பகுதிகளில் தொழிற்சாலைகள், ஓட்டல்கள் போன்றவை செயல்படத் துவங்கியுள்ளன. இலங்கையில் புலிகளுடனான உச்சகட்டப் போர் நடந்த போது, போர் குற்றங்கள் நடந்ததாக ஒரு சில அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. இவ்வாறு பெரிஸ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக