27 மே, 2010

கட்டுநாயக்க, இரத்மலானை உட்பட 13 உள்ளூர் விமான நிலையங்கள் அபிவிருத்தி

கட்டுநாயக்க, இரத்மலானை விமான நிலையங்கள் உட்பட மேலும் 13 உள்ளூர் விமான நிலையங்களை முழுமையாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றதுடன் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் விமானப் பயணிகளுக்குக் கூடுதல் வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் முழுமையான அபிவிருத்திக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயற்திட்ட மீளாய்வு நிகழ்வு அலரி மாளிகையில் நடை பெற்ற போது மேற்படி விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப் பட்டன. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 23 விமான சேவை நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்கள் வந்து போகின்றன. 46 மார்க்கங்கள் ஊடாக இச்சேவைகள் இடம்பெறுகின்றன.

நாட்டில் தற்போது நிலவும் அமைதிச் சூழலில் உல்லாசப் பிரயாணிகளின் வருகை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் தொகையும் ஐம்பது வீதத்தால் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையம் முழுமையான அபிவிருத்திக் குள்ளாக்கப்படவுள்ளது. இதுவரை காலமும் வருடத்திற்கு 4.2 மில்லியன் என்ற வீதத்திலேயே மக்கள் விமான நிலையத்தை உபயோகப்படுத் தியுள்ளனர். எதிர்வரும் 2012ம் ஆண்டில் இதனை 6 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தியின் கீழ் விமான நிலைய போக்குவரத்துக்கான விசேட சொகுசு ரயில் சேவை, தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் விமானங்களுக்கிடையில் மாறும் பயணிகளுக்கான ஹோட்டல் வசதிகளை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் அம்பாந்தோட்டை மத்தள புதிய விமான நிலையம் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. வருடத்திற்கு ஒரு மில்லியன் பிரயாணிகள் உபயோகப்படுத்தும் வகையில் சகல வசதிகளையும் அங்கு ஏற்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

3500 மீற்றர் நீள ஓடு பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் முதற் கட்டமாக 10 விமானங்கள் தரித்து நிற்கக் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. சர்வதேச எட்டு விமான மார்க்கங்களை உபயோகிப்பதற்கும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அனுமதி பெறப்பட்டுள்ளன. அத்துடன் இத்திட்டத்தின் சமகாலத்தில் இரத்மலானை உட்பட 13 உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக