27 மே, 2010

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள்: ரூ.7000 மில். செலவில் அபிவிருத்தி திட்டங்கள்


*
பள்ளிமுனை நீர்விநியோகம்
*
வவுனியா - கிளிநொச்சி, சுன்னாகம் மின் விநியோகம்
*
மன்னார், கிளிநொச்சி வைத்தியசாலைகள் புனரமைப்பு


மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 7000 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர், மின் விநியோகம், நீர்ப்பாசனம், மற்றும் சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி, அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டே அரசாங்கம், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வட மாகாண சபை, இலங்கை மின்சார சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி, மற்றும் ஜப்பான் சர்வதேச உதவி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மின்சாரம்

வட மாகாணத்தில் தேசிய மின்சார கட்டமைப்பை மேம்படுத்தி, வட பகுதி மக்களின் அன்றாட வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் 69.4 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பல்வேறு மின்சார அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம். எம். சி. பேர்டினன்டோ தெரிவித்தார். வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரை 132 கிலோ வோல்ட் மின் இணைப்புக்களை ஆரம்பிக்கும் திட்டத்திற்கென ஜப்பான் அரசாங்கம் 33.6 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், கிளிநொச்சி முதல் சுன்னாகம் வரை 132 கிலோ வோல்ட் ‘கிரிட்’ உப நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 32.9 மில். அமெரிக்க டொலர்களையும் கடனுதவியாக வழங்குகின்றது.

நீர் விநியோகம், நீர்ப்பாசனம்

மன்னார், பள்ளிமுனை பிரதேச மக்களின் நலன் கருதி 35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிமுனை நீர் விநியோக திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கான நிதி உதவியை வழங்குவதாக தெரிவித்த வட மாகாண ஆளுநர், இதன்மூலம் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன என்றார். அத்துடன் வவுனியா மன்னார் மக்களின் நலன் கருதி உலர் வளப் பகுதியில் நீர் விநியோக திட்டத்திற்கான அடிக்கல்லும் இன்று நாட்டப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சுகாதாரம்

மன்னார், கிளிநொச்சி மக்களின் சுகாதார துறையை மேம்படுத்தும் நோக்கில் இரு வைத்தியசாலைகளின் பல பகுதிகள் புனரமைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கென வட மாகாண சபையினால் சுமார் 130 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ள துடன், நெகோர்ட் அமைப்பின் ஊடாக புனர்நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. 80 மில்லியன் ரூபா செலவில் மன்னார் வைத்தியசாலையின் முன்று மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரு மாடிகளில் சத்திரசிகிச்சை வார்ட்கள் இரண்டும், கீழ் மாடியில் சத்திரசிகிச்சை கூடமும் அமைக்கப்பட்டு ள்ளது. சகல வசதிகளுடன் குளிரூட்டப்பட்டு ள்ளது.

சுமார் 50 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி வைத்தியசாலையின் பல பகுதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட இரு வார்ட்களும், அவசர சேவை பிரிவும், சத்திரசிகிச்சை வார்ட்டும் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேலும் குறிப் பிட்டார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்த வைபவங்களில் அமைச்சர்களான பாடலி சம்பிக்க ரணவக்க, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் ஹருஹிகோ, குருரோடா, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் குனிஓ தக்கஹாஷி, ஜப்பான் சர்வதேச உதவி நிறுவனத்தின் பிரதான பிரதிநிதி அக்கிரா ஷிமூரா, மாவட்ட செயலாளர்கள் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக