ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் வாழ்வில் பிரவேசித்து நேற்று (27ம் திகதியுடன்) நாற்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.
1970ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பாராளுமன்ற உறுப்பினரானதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்வு ஆரம்பமானது. தனது 24வது வயதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி வேட்பாளராக பெலியத்த தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அரசியல் வாழ்வில் கட்டம் கட்டமாக வளர்ச்சிப் படிகளில் காலடி பதித்தார்.
ஸ்ரீல.சு. கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி 1994ம் ஆண்டில் ஆட்சி பீடமேறிய போது அந்த ஆட்சியில் தொழிலமைச்சராகவும் அதன் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்தார். இக்காலப் பகுதியில் தொழிலாளர்களதும் மீனவ சமூகத்தினதும் மேம்பாட்டுக்காக அளப்பரிய பல வேலைத் திட்டங்களை அவர் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 2002-2004ம் ஆண்டு காலப் பகுதியில் அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களின் விமோசனத்திற்காகத் தொடராகக் குரல் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுப் பிரதமராக நியமிக்கப்பட்டார். இக்காலப்பகுதியில் கமநெகும, மகநெகும திட்டங்களை அவர் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். வீதிகளை கொங்கிஹட் போட்டு செப்பனிடும் முறை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான்.
அதன் பின்னர் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அளித்த சிறந்த தலைமைத்துவத்தின் பயனாக இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
ஐ.நா. சபையில் தமிழில் உரையாற்றியமை, சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றமை, முப்பது வருட பயங்கர வாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தமை, ஜீ.15 அமைப்பின் தலைமை என்பன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் குறிப்பிடக் கூடிய சிறப்பம்சமாக உள்ளன.
| ||||||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக