28 மே, 2010

தடம்புரண்ட பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 75 பேர் பலி



மேற்கு வங்கத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலொன்று நேற்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 75 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத்தாக்குதலுக்கு நக்ஷலைட்டுகளுக்கு சார்பான அமைப்பொன்று உரிமை கோரியுள்ளது.

நேற்று நள்ளிரவு 1.35 அளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலினால் பயணிகள் ரயில் தடம்புரண்டது. இந்த வேளையில், இந்த வழியால் வந்த சரக்கு ரயில் வண்டியொன்று மோதியதிலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து மும்பை குர்லாவுக்கு நேற்றிரவு ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. நள்ளிரவு 1.35 மணிக்கு அந்த ரயில் மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் சரக்பூர் அருகே சர்திகா ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மாவோயிஸ்டுகள் ரயில் தண்டவாளத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

இதனால் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. மொத்தம் 13 பெட்டிகள் தடம் புரண்டு விழுந்தன. அந்த பெட்டிகள் அனைத்தும் அருகில் உள்ள தண்டவாளத்தின் மீது சரிந்து கிடந்தன சரக்கு ரயில், கவிழ்ந்து கிடந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கவிழ்ந்து கிடந்த பெட்டிகள் நொறுங்கின. சரக்கு ரயிலும் கவிழ்ந்தது.

கண் இமைக்கும் நேரத்துக்குள் இந்த கோர சம்பவம் நடந்தது. ரயில் பெட்டிகள் மீது சரக்கு ரயில் மோதிய போது அந்த பகுதியே குலுங்கியது. ஏற்கனவே காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகளை சரக்கு ரயில் மோதியதில் பலர் உயிரிழந்தனர்.

காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகள் மீட்கப்பட்டு ஹெலிகொப்டர்கள் மூலம் சரக்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிக காயம் அடைந்தவர்கள் மிட்னாபூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட பயணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரயில்வே துறை அமைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது.

சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக