மீள்வாக்குப் பதிவுக்கான பிரசாரங்கள் இன்றுடன் முடிவு;
150க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு பணிகளில்
நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதிகளில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்தப்படவிருக்கும் மீள்வாக்களிப்பில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக சுதந்திர தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டைச் சேர்ந்த சுமார் 150இற்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் இவ்விரு தேர்தல் தொகுதிகளிலுமுள்ள 38 வாக்குச் சாவடிகளிலும் கடுமையான கண்காணிப்புப் பணிகளை முன்னெடுக்கவிருப்பதாக பெப்ரல் சி. எம். இ. வி. மற்றும் கபே அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறினர்.
பாராளுமன்றத் தேர்தல்கள் தினத்தன்று மேற்படி தேர்தல் தொகுதிகளில் மோசடி இடம்பெற்றமை காரணமாக வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டு எதிர்வரும் 20ம் திகதி மீள் வாக்களிப்பை நடாத்த தேர்தல்கள் ஆணையாளரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மீள்வாக்களிப்பு நடத்தப்படவிருக்கும் 38 வாக்காளர் பிரிவுகளுக்குமென 50 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த பெப்ரல் அமைப்பு தீர்மானித்திருப்பதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறினார்.
இரண்டு குழுக்களாக இவர்கள் செயற்படுவர். எட்டுப் பேர் கொண்ட குழு கும்புறுபிட்டியவிலும் மிகுதி 42 பேர் கொண்ட குழு நாவலப்பிட்டியிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக பெப்ரல் 04 வாகனங்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சி. எம். இ. வி. அமைப்பு ஒரு வாக்காளர் பிரிவுக்கு ஒருவர் வீதம் 38 பேரையும் 02 வாகனங்களையும் கண்காணிப்பில் ஈடுபடுத்தவிருப்பதாக அதன் பேச்சாளர் கெ. திசாநாயக்க தெரிவித்தார். கடந்த முறை மேற்படி தேர்தல் தொகுதிகளில் வாக்குச் சாவடிக்கு வெளியிலேயே கூடுதலான மோசடிகள் குறித்து முறையிடப்பட்டமையினால் வாக்குச் சாவடிகளுக்கு வெளியிலேயே கூடிய கண்காணிப்பு பணிகளை முன்னெடுக்க விருப்பதாகவும் அவர் கூறினார்.
கபே அமைப்பு நேற்று முதல் கண்காணிப்பாளர்களை வாக்காளர் பிரிவுகளுக்கு அனுப்பி நிலைமையை அவதானித்து வருவதுடன் தேர்தல்கள் தினத்தன்று சுமார் அறுபதுக்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்க தீர்மானித்திருப்பதாகவும் அதன் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
அதேவேளை, தேர்தல் பிரசாரப் பணி கள் இன்று (17) நள்ளிரவுடன் நிறைவடைவ தனால் நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப் பிட்டி தேர்தல் தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன சுட்டிக்காட்டினார்.
வாக்களிப்பு தினமான எதிர்வரும் 20ம் திகதி வாக்குச் சாவடிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுமெனவும் மோசடிகள் அசம்பாவிதங்கள் இடம்பெறும் பட்சத்தில் பாரபட்சமின்றி சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்கள் உசார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
மீள்வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் நடவடிக்கைகளை கவனிக்கவென கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று அப்பிரதேசங்களுக்கு அனு ப்பிவைக்கப்படவுள்ளன. வாக்குச் சாவடி களில் பணியாற்றுவதற்காக 380 உத்தி யோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் வாக்கு எண்ணுவதற்கு 650 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும் தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக