17 ஏப்ரல், 2010

பிரபாகாரனின் தாயாரைத் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மதிமுக உண்ணாவிரதம்




சென்னை வந்த பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மதிமுக சார்பில் வரும் 23-ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் நேற்றிரவு, மலேசியாவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு தமிழகத்துக்கு வந்தபோது, சென்னை விமான நிலையத்தில் கீழே இறங்கவிடாமல், இந்திய அரசின் அதிகாரிகள் அதே விமானத்தில் அவரை திரும்பவும் மலேசியாவுக்கே அனுப்பிவிட்டனர்.

80 வயதாகும் அவர், சில ஆண்டுகளுக்கு முன்னரே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஒரு கையும், காலும் செயல் இழந்த நிலையில் அவதிப்படுகிறார். இந்நிலையில், கனடாவில் வசிக்கும் அவர்களது மகள் வினோதினி, தாயாரைத் தன்னோடு கனடாவுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து சிவாஜிலிங்கம் எடுத்துக்க கொண்ட முயற்சியால், பார்வதி அம்மையார் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே தங்கி இருக்கின்ற அனுமதிக் காலம், நேற்று முடிவு அடைய இருந்தது. இந்நிலையில், உயர்ந்த நவீன மருத்துவ சிகிச்சைக்கு வாய்ப்பு உள்ள தமிழகத்துக்கு அவரை அழைத்து வந்து சிகிச்சை அளித்து, அதன் பின்னர் கனடாவுக்குச் செல்லும் அனுமதியைப் பெற்று அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியா வருவதற்கு முறைப்படி அனுமதி பெற பார்வதி அம்மையார் விண்ணப்பித்ததன்பேரில், இந்திய அரசு அனுமதி தந்து விசாவும் வழங்கி விட்டது. எனவே, இந்தியாவில் தமிழகத்துக்கு வருவதற்கான சட்டப்படியான அனுமதியும், ஆவணங்களும் கொண்டு பார்வதி அம்மையார், நேற்று மலேசியாவில் இருந்து மாலை விமானத்தில் புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். அவர்களையும், அவருக்கு உதவியாக வந்த விஜயலெட்சுமி என்பவரையும் விமானத்தில் இருந்து இறங்க விடாமல் அதிகாரிகள் தடுத்த கன்வேயர் பெல்ட் வழியாக விமான நிலையத்துக்கு உள்ளே வந்து விட்ட அவரது பெட்டிகளைத் திரும்ப எடுத்துக்கொண்டு போய் விமானத்திலேயே வைத்து விட்டார்கள்.

நள்ளிரவில், அதே விமானத்தில் திருப்பி அனுப்பி விட்டார்கள். ஏற்கனவே உடல் நலிவுற்று இருக்கின்ற அந்த மூதாட்டி, இந்த விமானப் பயணத்திலேயே மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பார். ஏற்கனவே மத்திய அரசு விசா வழங்கிய நிலையில், திருப்பி அனுப்பியதன் மர்மம் என்ன?

மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது. பார்வதி அம்மையார் வருகின்ற செய்தி, முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதிக்குத் தெரியும். இந்திய உளவுத்துறை தகவல் தந்து விட்டது. இது மத்திய அரசின் நடவடிக்கை என்று கருணாநிதி, தப்பித்துக் கொள்ள முடியாது.

பார்வதி அம்மையார் அவர்களை, திருப்பி அனுப்பிய அநீதியைக் கண்டித்து, தலைநகர் சென்னையில், ஏப்ரல் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மதிமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக