17 ஏப்ரல், 2010

'த.தே.கூ. உடன் இணைந்து செயற்படுவோம்'





சம்பந்தனுடன் ஹக்கீம்(கோப்பு)

அரசியல் தீர்வு முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ரவூப் ஹக்கீம் செவ்வி

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டே இரு தரப்பு பிரதிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரவூப் ஹக்கீம் தமிழோசையிடம் கூறினார்.

தமிழ்,முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள கட்சிகள் என்ற வகையில் இரண்டு கட்சிகளுக்கும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தார்மீக பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


கூட்டமைப்பு தலைவர்களுடன் ஹக்கீம் (கோப்பு)

எதிர்கால அரசியல் களச்சூழ்நிலையை எதிர்கொள்வது, இனப்பிரச்சனைத் தீர்வுக்கான வழிமுறைகள் மற்றும் யாப்பு சீர்திருத்தத்தில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து உடன்பாடுகளை எட்டுவதற்காக கூட்டிணைந்து செயற்பட வேண்டுமென்பதை இரு தரப்பினருமே உணர்ந்துள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறினார்.

அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைகள் தொடர்பில் அலட்சியப் போக்கை முன்னெடுக்கக் கூடிய அபாயத்தை தடுப்பதற்கு இவ்வாறான இணைந்த அரசியல் நடவடிக்கை அவசியம் எனவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கு முன்னர் இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவதற்கு தேர்தல் முறைமைகளில் உள்ள சிக்கல்களே தடையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக