22 ஏப்ரல், 2010

சந்திரன், செவ்வாயில் தண்ணீர் அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்



வாஷிங்டன்: சந்திரனிலும், செவ்வாயிலும் தண்ணீர் இருப்பதை, அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது சம்பந்தமான ஆய்வு ஒன்றை அவர்கள், சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்தியாவின் 'சந்திரயான்,' சந்திரனில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்தது. இதையடுத்து, அமெரிக்காவின் ஹூஸ்டனிலுள்ள, 'லூனார் அண்டு பிளானட்டரி இன்ஸ்டிடியூட்' விஞ்ஞானிகள், அதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். அத்தோடு, செவ்வாய் கிரகத்திலும் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் இரண்டு ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். முதல் ஆய்வறிக்கை, சந்திரன் மற்றும் செவ்வாயில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. இரண்டாவது அறிக்கை, தண்ணீர் எவ்விதத்தில் இரு கிரகங்களிலும் இருக்கிறது என்பதை விவரிக்கிறது.அதன்படி, செவ்வாயில், சமீபத்தில் பனி உருகி, பின் இறுகி பனிக்கட்டியாக இருக்கிறது. அதற்கான ஆதாரமாக, நீர் ஓடிய தடம் அங்கு காணப்படுகிறது. அதன் அகலம் ஆறு அடி; நீளம் 400 அடி.

மேலும் இந்த தடத்திலிருந்து, பல இடங்களில் கிளை கால்வாய்கள் ஓடியிருக்கின்றன. சந்திரனிலும் இதே போன்று பனிக்கட்டிகள், ஆங்காங்கே உறைந்து கிடக்கின்றன. இது குறித்து லூனார் இன்ஸ்டிடியூட்டின் பால் ஸ்படிஸ் என்பவர் கூறுகையில், 'தண்ணீரின் மூலக்கூறுகள் கொண்ட வால் நட்சத்திரம் அல்லது எரி நட்சத்திரம் சந்திரனில் மோதியதால் தண்ணீர் சந்திரனில் உருவாகியிருக்கக் கூடும்.

சந்திரனில் காணப்படும் பள்ளம் வழக்கத்துக்கு மாறானதாக இருந்தாலும் அதில், ஆறடி முதல் 10 அடி உயரத்திற்கு பனிக்கட்டிகள் காணப்படுகின்றன' என்று தெரிவித்தார்.மேலும் இந்த இரண்டு ஆய்வறிக்கைகளும், சூரியக் குடும்பம் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியும் ஆராய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக